பரவலாக “அறிஞர் அண்ணா” என்று அறியப்பட்ட, காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909] – 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தரக் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
அவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார். பெரியாரின் சில நடவடிக்கைகள் காரணமாக எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949 ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார்.
1957 ஆம் ஆண்டு வரை தி.மு.க, ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகவே இருந்துவந்தது. 1957 ல் நடைபெற்ற தேர்தலில் கலந்து கொள்ள முடிவு செய்த கழகம், அத்தேர்தலில் 15 இடங்களை வென்றபோது அண்ணாதுரையும் சட்ட சபை உறுப்பினரானார்.
தொடர்ந்து வந்த பத்தாண்டு காலத்தில், தமிழ் மக்களுக்குப் பாதகமானது என்று கருதப்பட்ட, மத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தியதன் மூலம், தி.மு.க வை ஒரு பலம் மிக்க அரசியல் இயக்கமாக வழி நடத்திச் சென்றார். இதன் காரணமாக 1967 ல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார்.
மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர், 2-3 பிப்ரவரி 1969 ல் காலமானார். ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூரப்படுகிறார்.
1967 க்குப் பின்னர் இன்றுவரை சுமார் 41 வருடங்கள் திராவிட இயக்கத்தின் வழிவந்த கட்சிகளே உறுதியாகத் தமிழகத்தை ஆண்டுவருவதும், அவைகள் அனைத்துமே அண்ணாதுரையையே முன்நிறுத்தி அரசியல் நடத்திவருவதும், அண்ணாவின் வழிமுறைகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
Leave a comment
No comments yet.
Leave a Reply