பெரியார்

பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. ராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம விழுமியத்தை கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். கடவுள் நம்பிக்கை, சமயம் என்பவை மூடநம்பிக்கைகளை வளர்ப்பதாகக் கருதிய ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார்.

இவருடைய விழுமியங்களும், கொள்கைகளும், தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும் (சுயமரியாதை இயக்கம், நாத்திகம்) , அரசியல் பரப்பிலும் (திராவிடர் கழகம்) ஆழ்ந்த சலனங்களும், தாக்கங்களும் ஏற்படுத்தியவை.

இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

வாழ்க்கை

மிக இளம் வயதிலேயே பாடசாலைக் கல்விக்கு முழுக்குப்போட்டுவிட்டுத் தந்தையாரின் வணிக முயற்சிக்குத் துணையாக இருந்தார். எனினும் சமூக ஈடுபாடு இவரைத் தீவிர அரசியலுக்குத் தூண்டியது. தனது நாற்பதாவது வயதில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, தனது மனைவியுடன் சிறை சென்றார். காந்தியடிகளின் கொள்கையை ஏற்றுக்கொண்டு அந்த இயக்கத்தின் பல்வேறுபணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பின்னர் கொள்கை அடிப்படையில் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, அரசியலிலிருந்து ஒதுங்கிய ஈ.வே.ரா அவர்கள், தன்மான இயக்கத்தில் அக்கறை காட்டத்தொடங்கினார். திராவிடத் தேசியத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர், இதே கருத்துடைய வேறு பலருடன் சேர்ந்து தனது கொள்கைகளை வற்புறுத்தி வந்தார். அக்காலத்தில் பரவலாக திகழ்ந்த வடமொழி ஆதிக்கம், பிராமண ஆதிக்கம் போன்றவற்றுக்கு எதிராகப் போராடிவந்தார். 1939 இல் இவர் சார்ந்திருந்த இயக்கத்தினூடாகத் தனி் திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தார். 1944 இல் இவருடைய இயக்கம் திராவிடக் கழகம் எனப்பெயர் பெற்றது. இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர், பெரியாரின் சில செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த சிலர், சி. என். அண்ணாதுரை தலைமையில் திராவிடக் கழகத்திலிருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் இயக்கத்தைத் தொடங்கினர். பெரியாருடன் கருத்து வேறுபாடு இருந்தபோதும், தி.மு. கழகத்தினர், அவருடைய கொள்கைகளையே பின்பற்றிவந்தனர். 1967 ல் தி.மு.க வினர் தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தபோது பெரியார் அவர்களுக்கு ஆதரவு வழங்கினார்.

பெரியார் வளர்த்தெடுத்த உணர்வுகள் தமிழ் நாட்டில் ஆழமாக வேரூன்றியமை காரணமாக 1967 க்குப் பின் தமிழ் நாட்டையாண்ட எல்லா அரசாங்கங்களும், இவருடைய திராவிட இயக்கக் கூடாரத்தைச் சேர்ந்தவையாகவே இருந்தன.

அவர்தாம் பெரியார்

பெரியார் ரசிகர்கள், அவர் கொள்கைகளை எதிர்க்கிறவர்கள் எல்லோரும் நிச்சயமாக படிக்க வேண்டிய கட்டுரை. 19.9.2004 ஜூனியர் விகடனில் ஞாநி எழுதிய கட்டுரை.

தீண்டாமை என்ற மிகப் பெரிய சமூகக் கொடுமைக்கு எதிராக இருபதாம் நூற்றாண்டில் நடந்த முதல் மாபெரும் போராட்டம்… வைக்கம் போராட்டம்! 1924-ல் நடந்த அந்தப் போராட்டத்துக்குக் காரணம், மாதவன் என்ற ஈழவ சாதி வக்கீலை திருவனந்தபுரம் நீதிமன்றத்துக்குள் பணிக்குச் செல்லவிடாமல் தடுத்ததுதான். நீதிமன்றம் அரண்மனை வளாகத்தில் இருந்தது. மகாராஜா பிறந்த நாளுக்காக யாகம் நடந்துகொண்டிருந்தது. அப்போது ஈழவர் அந்த வளாகத்தில் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று மாதவன் தடுக்கப்பட்டார்.

கேரளா முழுவதும் கோயில்களை சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக்கூடாது என்ற தடை இருந்தது. இதையெல்லாம் எதிர்த்துதான் வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில், நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டது. போராட்டத்தை முன்னெடுத்த 19 முக்கிய தலைவர்களும் கைதானதும், போராட்டம் தொய்வடைந்தது. சிறையில் இருந்த தலைவர்கள் ஜார்ஜ் ஜோசப்பும் கேசவ மேனனும் அன்றைய சென்னை மாகாண காங்கிரஸ் செயலாளருக்குக் கடிதம் அனுப்பினார்கள். ‘நீங்கள் வந்து தலைமை ஏற்றால்தான் போராட்டம் தொடர முடியும். உடனே வாருங்கள்’ என்ற அந்தக் கடிதம் வந்தபோது, பண்ணைபுரத்தில் பொதுக்கூட்டம் பேசிவிட்டு, ஈரோடு திரும்பிவந்த காங்கிரஸ் செயலாளர் உடனே வைக்கம் சென்றார். அவர் தலைமை ஏற்றபிறகுதான் வைக்கம் போராட்டம் சூடுபிடித்தது. அவர்தான் ‘அய்யா’, ‘பெரியார்’, ‘தந்தை பெரியார்’ என்றெல்லாம் அன்புடன் பலராலும் அழைக்கப்படுகிற ஈ.வெ.ராமசாமி (1879-1973).

பெரியார் தன் அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் காரராகத்தான் தொடங்கினார். ஈரோடு நகராட்சித் தலைவராகவும் பெரும் வியாபாரியாகவும் இருந்தவரை அரசியலுக்கு அழைத்துவந்தவர்கள் ராஜாஜி, வரதராஜுலு நாயுடு இருவரும்தான்.

அரசியலுக்கு வந்ததும் அரசாங்கப் பதவிகளைப் பிடிப்பதுதான் பலருக்கும் லட்சியம். ஆனால், பெரியார் அரசியலுக்குள் நுழையும்முன்பு, தான் வகித்துவந்த பல்வேறு பதவிகளை உதறிவிட்டு வந்தார். வியாபாரிகள் சங்கத் தலைவர், தென்னிந்திய வியாபாரிகள் சங்க நிர்வாக சபை உறுப்பினர், இன்கம்டாக்ஸ் டிரிப்யூனல் கமிஷனர், டவுன் ரீடிங் ரூம் செக்ரெட்டரி, ஹைஸ்கூல் போர்ட் செக்ரெட்டரி, தாலூகா போர்ட் பிரசிடெண்ட், முனிசிபல் சேர்மன், ஜில்லா போர்ட் மெம்பர், வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரெட்டரி, ப்ளேக் கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான பிரசிடெண்ட், உணவு கண்ட்ரோல் டிஸ்ட்ரிப்யூஷன் ஆபீஸர் உட்பட மொத்தம் இருபத்தொன்பது பதவிகளையும் விட்டுவிட்டு அரசியலில் நுழைந்தார். கடைசிவரை தேர்தலில் போட்டியிடவில்லை. எந்த அரசுப் பதவியையும் வகிக்கவில்லை. அவர் மறைந்தபோது அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார். காந்திய இயக்கம், பொது உடைமை இயக்கம், திராவிட இயக்கம் என்று தமிழ்நாட்டின் மூன்று பெரும் இயக்கங்களிலும் தீவிரப் பங்காற்றிய முதல் பெரும் தலைவர் அவர்தான். காங்கிரஸில் காந்தியின் தலைமையை ஏற்று இருந்தபோது, தமிழகம் முழுவதும் கதர் துணியைப் பரப்பினார். தன் குடும்பம் முழுவதும் கதர் உடுத்தச் செய்தார். மதுவிலக்குப் போராட்டத் துக்காக, தனக்குச் சொந்தமான கள் இறக்கும் தென்னைமரங் களையே வெட்டித் தள்ளினார். ஒத்துழையாமை இயக்கத்துக்காக நீதிமன்றப் புறக்கணிப்பு செய்து, வழக்குகளின் மூலம் தனக்கு வரவேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களை இழந்தார்.

கொள்கையில் உறுதி என்பதை அவர் கடைசிவரை தளர்த்தியதில்லை. ராஜாஜியுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமான நண்பராக இருந்தார். ஆனால், கொள்கைப் போராட்டத்தை விட்டுக்கொடுத்த தில்லை. ராஜாஜி இறந்தபோது தன் நோயையும் பொருட்படுத்தாமல், சக்கர நாற்காலியில் சென்று இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார். ‘சுயநலமற்ற வரான ராஜாஜி, இட ஒதுக்கீடு, சாதி ஒழிப்பு என்ற இரண்டையும் ஏற்றுக்கொண்டு, காங்கிரஸ் கட்சி மூலமாகவே அதைச் செயல்படுத்தியிருந்தால், நான் கடைசிவரை அவர் தொண்டனாகவே மகிழ்ச்சியுடன் என் காலத்தைக் கழித்திருப்பேன்’ என்று அப்போது பெரியார் எழுதினார்.
அநாதை இல்லக் குழந்தைகளுடன்..

வைக்கம் போராட்டத்திலேயே அவருடைய கொள்கை உறுதியைப் பார்க்கலாம். காந்தி, ராஜாஜி, சீனிவாச அய்யங்கார் என்று சக காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக்கொண்டும்கூட போராட்டத்தை நிறுத்திவிட்டு, சென்னை திரும்ப மறுத்தார் பெரியார்.

இந்தப் போராட்டத்துக்காக கைதான பெரியார், சிறையில் இருந்தபோது, அவருக்கு எதிராக சத்ரு சம்ஹார யாகம் ஒன்றை கேரள சனாதனிகள் நடத்தி னர்கள். யாக முடிவில் எதிரி (ஈ.வெ.ரா.) சாகவேண்டும் என்பது நோக்கம். ஆனால், யாகத்தின் முடிவில் மகாராஜா இறந்துவிட்டார். பெரியாரைக் குறிவைத்து அனுப்பிய யாக பூதம் திருப்பிக்கொண்டு ராஜாவையே கொன்றுவிட்டது என்று சிறை வார்டன் தன்னிடம் சொன்னபோது, அப்படிச் சொல்வதும் மூட நம்பிக்கைதான் என்றார் பெரியார்.

தீண்டாமை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, வகுப்புவாரி இட ஒதுக்கீடு, பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற பெரியாரின் கொள்கைகள் அளவுக்கு முக்கியமானவை, அவருடைய பெண்ணுரிமைக் கோட்பாடுகள். தன் மனைவி நாகம்மாள், தங்கை கண்ணம்மாள் இருவரையும் போராட்டங்களுக்குத் தலைமை ஏற்க வைத்தார். சடங்குகள் இல்லாத எளிமையான சுயமரியாதை திருமண முறையை அறிமுகப்படுத்தியவர் அவர்தான். 1929-லிருந்து நான்கே ஆண்டுகளில் அப்படிப்பட்ட எட்டாயிரம் திருமணங்களை சுயமரியாதை இயக்கம் நடத்தி வைத்தது. திருமணம் செய்யும் உரிமை, செய்யாமல் இருக்கும் உரிமை, பிடிக்காத திருமணத்திலிருந்து வெளியேறும் உரிமை, திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் உரிமை, குழந்தை பெறும் உரிமை, பெறாமல் இருக்கும் உரிமை, இவையெல்லாம் பெண்ணுக்கு உரிய உரிமைகள் என்று அவர் முன்னோடியாக பிரசாரம் செய்திருக்கிறார். பெண்களுக்கு எல்லா உத்தியோ கங்களிலும் சரி, பாதி இட ஒதுக்கீடு செய்யவேண்டுமென்று 80 ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் போட்டவர் அவர்.

இன்று கல்வி நிலையங்களிலும் அரசு வேலைகளிலும் எல்லா சாதியினரும் இருப்பதற்கான முக்கியமான காரணங் களில் ஒருவர் பெரியார். அவர் இதற்காகப் போராடத் தொடங்கிய காலத்தில், கல்லூரிப் படிப்பு படித்தவர்களில் நூற்றுக்கு 65 பேர் பிராமணர்கள். மீதி 35 பேர்தான் எல்லா சாதியினரும். ஆனால், அன்று மக்கள் தொகையில் நூற்றுக்கு 97 பேர் பிராமணரல்லாதவர்கள்தான். அன்று அரசாங்க வேலைகளில் உயர் பதவிகளில் நூற்றுக்கு 47 இடங்களில் பிராமண அதிகாரிகள், 30 இடங்களில் ஆங்கிலேயர்கள், 23 இடங்கள்தான் மீதி எல்லா சாதியினருக்கும்.

ஒரு பெரும் சமுதாயத்தின் கல்வி நிலை, வேலை நிலையை மாற்றி அமைத்த பெரியார், மூன்றாவது வகுப்புக்கு மேல் படித்தவரல்ல. ஆனால், அவர் கொண்டுவந்த மொழிச் சீர்திருத்தத்தைப் பின்பற்றித்தான் இந்தக் கட்டுரைகூட எழுதப்படுகிறது. காந்தி, நேரு, போஸ், திலகர், ராஜாஜி என்று மெத்தப் படித்தவர்களே பெரும் தலைவர்களாக இருந்த காலகட்டத்தில், பெரியார்தான் மூணாங்கிளாஸ் படித்த தலைவர். ஆனால், பெரும் படிப்பு படித்த பலரை அவரது இயக்கம் ஈர்த்து, அவருக்குத் தொண்டர்களாகப் பணிபுரியச் செய்தது. காங்கிரஸிலிருந்து சுயமரியாதை இயக்கம்வரை பெரியார்கூட நெருக்கமாக இருந்து அவர் நடத்திய பத்திரிகைகளில் எழுதிய மற்றும் பொறுப்புவகித்த எஸ். ராம நாதன், குத்தூசி குருசாமி, அண்ணா, கி.வீரமணி, ஆனைமுத்து எனப்பலரும் முதுநிலைப் பட்டதாரிகள்.

ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக் காக சாகும்வரை ஓயாமல் பிரசாரம் செய்ததில் அவரை மிஞ்ச உலக அளவில் கூட யாரும் இல்லை. வருடத்தில் பாதி நாள் டூர்தான். மீட்டிங்தான்.

90-வது வயதில் 41 நாள் டூர். 180 கூட்டம்.

91-வது வயதில் 131 நாள் டூர். 150 கூட்டம்.

93-வது வயதில் 183 நாள் டூர். 249 கூட்டம்.

94-வது வயதில் 177 நாள் டூர். 229 கூட்டம்.

வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 38 நாள் டூர். 42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன். ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார். சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருந்தது.

அவர்தாம் பெரியார்….!!!!!!!

Advertisements

4 Comments

  1. தலைப்பில் ஈவேரா என வைக்கப்பட்டுள்ளது. அதை தந்தை பெரியார் என மாற்றிவிடவும்.

  2. நன்றி நண்பர் பகுத்தறிவு.

    தந்தை பெரியார் என்று பதிவதால் இரண்டு வரிகளாக மாற்றம் பெறுகிறது பக்கம். அதனால் பெரியார் என்று மாற்றி விட்டேன்.

    நன்றிகள் உங்கள் வருகைக்கும் , ஆதரவிற்கும்.

  3. Gadaul Elai Entru Nam Solla Nenaiththai antru Sonnar

  4. this very true coment periyar is great


Comments RSS TrackBack Identifier URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s