எப்போதோ நடந்தேறியிருக்க வேண்டிய ஒன்று காலதாமதமாக இப்போதாவது நடந்திருக்கிறதே என்கிற வகையில் மகிழ்ச்சி. மு.க. ஸ்டாலினுக்குப் பதவியும் அங்கீகாரமும் ஆரம்பம் முதலே தாமதமாகத்தான் கிடைத்து வருகிறது.
1989-ல் 13 ஆண்டு அரசியல் வனவாசத்திற்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தபோது மு.க. ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டிருந்தால் யாரும் குற்றம் கண்டிருக்க மாட்டார்கள். ஏனோ, முதல்வர் கருணாநிதி அவரை அமைச்சராக்கவில்லை.
இன்றைய அமைச்சரவையில், க. அன்பழகன் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தவிர ஏனைய மூத்த அமைச்சர்களான ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி. மணி, பொன்முடி மற்றும் கே.என். நேரு ஆகியோர் முதன்முதலில் அமைச்சர்களானது அப்போதுதான்.
1996-ல் ஆட்சிக்கு வந்தபோது மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்த்தால் மீண்டும் ஏமாற்றம். சென்னை நகர மேயராக்கப்பட்டார். அவர் நிர்வாக அனுபவம் பெற வேண்டும் என்று தந்தையும் முதல்வருமான கருணாநிதி எதிர்பார்த்ததில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியலில் அனுபவமே இல்லாத பலரை அமைச்சர்களாக்குவதில் தயக்கம் காட்டாதவர் தனது மகனிடம் மட்டும் ஏன் தயக்கம் காட்டினார் என்பது புதிர்.
ஏனைய பல திமுக தலைவர்களைவிட, கட்சிப் பொறுப்பையோ ஆட்சிப் பொறுப்பையோ ஏற்கும் தகுதியும் அனுபவமும் மு.க. ஸ்டாலினுக்கு நிச்சயமாக உண்டு. அவரது அரசியல் வாழ்க்கை 70-களில் தொடங்கிவிட்டது. திமுக தலைவர் கருணாநிதியின் மகன் என்பதைவிட அடிமட்டத்திலிருந்து தன்னை உயர்த்திக் கொண்டவர் என்பதுதான் மு.க. ஸ்டாலினின் உண்மையான பலம்.கட்சிக்குப் பிரசார நாடகங்கள் போடுவது, கட்சியின் போராட்டங்களில் பங்கு பெறுவது, இளைஞர் அணியை வலுவான அமைப்பாக மாற்றி இன்றைய தலைவர்கள் பலரை உருவாக்கியது என்று கட்சிக்கு அவரது பங்களிப்பு கொஞ்சநஞ்சமல்ல.
அடிமட்டத் தொண்டராகத் தொடங்கிய அவரது அரசியல் வாழ்க்கை இளைஞரணி, சட்டப்பேரவை உறுப்பினர், சென்னை மாநகர மேயர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், அமைச்சர் என்று தொடர்ந்து இப்போது துணை முதல்வர் பதவியில் அவரை அமரச் செய்திருக்கிறது.கட்சியைப் பொருத்தவரை அவர் தன்னை ஒரு சக்தியாகத் தொண்டர்கள் மத்தியில் வளர்த்துக் கொண்டிருப்பது உண்மைதான் என்றாலும், இதுவரை அவரால் தனது தனித்தன்மையைக் காட்ட முடியாமல் இருப்பது ஏன் என்பதுதான் பலருக்கும் புரியாத புதிர்.
ஏனைய அமைச்சர்கள் எல்லோரும் பத்திரிகையாளர்களிடம் சகஜமாகப் பேசுவதும், பேட்டியளிப்பதுமாக இருக்கும்போது மு.க.ஸ்டாலின் மட்டும் ஒதுங்கியே இருப்பது ஏன் என்று ஆச்சரியப்படாதவர்கள் இல்லை.அதற்கு ஒரு முக்கியமான காரணம், அவர் கருணாநிதி என்கிற ஆலமரத்தின் நிழலில் இருப்பதுதான் என்று கருத வழியுண்டு. நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், மதியழகன் போன்ற ஜாம்பவான்கள்கூட கருணாநிதி என்கிற சூரிய வெளிச்சத்தின் முன்னால் பிரகாசிக்க முடியாதபோது இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்ட மு.க. ஸ்டாலினால் மட்டும் அது எப்படிச் சாத்தியம்?
மேலும், மு.க. ஸ்டாலினுக்குத் தந்தை கருணாநிதியிடம் இருக்கும் பயம் கலந்த மரியாதையால்கூட தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பாமல் இருக்கலாம். தனிமனித நாகரிகத்தைக் கடைப்பிடிப்பதில் மற்றவர்களிடமிருந்து எப்போதுமே வேறுபடுபவர் அவர். சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட சம்பவத்தின்போது எம்.எல்.ஏ.வான அவர் கடைப்பிடித்த நிதானம் அதற்கு ஓர் உதாரணம். தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது என்று மு.க. ஸ்டாலின் நினைப்பதுகூட காரணமாக இருக்கலாம்.
மேயராகவும் சரி, உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் சரி மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகளில் யாரும் பழுது காண முடியாது. தகுதியும் திறமையும் வாய்ந்த அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து, தனது துறையின் செயல்பாடுகளில் குற்றம் காண முடியாதபடி நிர்வகிப்பதில் அவர் யாருக்கும் சளைத்தவரல்ல. அதேநேரத்தில், மிகப்பெரிய சாதனை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருடைய நிர்வாகத் திறமை பளிச்சிடவும் இல்லை.
முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் முதுகுத்தண்டு அறுவைச்சிகிச்சைக்குச் சென்றபோதே ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதுதான் நமது கருத்து. இந்தத் தள்ளாத வயதில் வீல் சேரில் முதல்வர் அங்குமிங்கும் பயணிப்பதும், தன்னை வருத்திக்கொண்டு நாளும் கிழமையும் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிப்பதும் பிரச்னைகளை எதிர்கொள்வதும் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இந்தப் பொறுப்புகளைத் துணை முதல்வரான மு.க. ஸ்டாலின் இனிமேல் ஏற்றுச் செயல்படுவார் என்று நம்பலாம்.
இதுநாள் வரை முதல்வர் கருணாநிதியின் நிழலாக இருந்தவர் இனிமேல் தனது தனித்தன்மையைக் காட்ட வேண்டிய நேரம் கைகூடியிருக்கிறது. சுறுசுறுப்புடனும் அரசியல் சாதுர்யத்துடனும் தனது பொறுப்புகளை அவர் கையாளும் விதத்தில்தான் அவருடைய வருங்காலமும், திமுகவின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது. தமிழக சரித்திரத்தில் முதன்முறையாக ஒரு துணை முதல்வர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்தவகையில் மு.க. ஸ்டாலின் ஒரு முதல்வர்கூட. “தினமணி’யின் வாழ்த்துகள்.
2 Comments
Comments RSS TrackBack Identifier URI
சென்னை, மே 29: திமுகவில் இளைஞரணி பொறுப்பு, நான்கு முறை எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர் என்று அரசியலிலும், ஆட்சியிலும் பன்முகப் பொறுப்புகளை வகித்தவர் மு.க.ஸ்டாலின்.
முதல்வர் கருணாநிதியின் இளைய மகனான அவர், 1953-ம் ஆண்டு மார்ச் 1 – ம் தேதி பிறந்தார். இளங்கலை (அரசியல்) பட்டம் பெற்றவர்.
தமிழக சட்டப் பேரவைக்கு 1989, 1996, 2001 மற்றும் 2006 என நான்கு முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக, நெருக்கடிநிலை காலத்தில் “மிசா’ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். திமுக சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றார்.
1980-களில் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டபோது அதில் முக்கிய பங்காற்றினார். இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்று இப்போதும் அந்தப் பொறுப்பில் தொடர்கிறார்.
திருநெல்வேலியில் இளைஞரணியின் மாநாட்டை, 2007-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
சென்னை மாநகர மேயராக… 1996-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியைத் திமுக கைப்பற்ற, மேயரானார் ஸ்டாலின். அப்போது, நகரில் 10 மேம்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதில் ஒன்பது பாலங்கள் திறக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலிலும் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போதைய முதல்வர் ஜெயலலிதா “ஒருவருக்கு ஒரு பதவி’ என்று கொண்டு வந்த சட்டத்தால், மேயர் பதவியை ஸ்டாலின் இழக்க நேர்ந்தது.
உள்ளாட்சித் துறை அமைச்சராக… 2006-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அவருக்கு, உள்ளாட்சித் துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவருக்கு முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவி எப்போது அளிக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், முதல்வர் கருணாநிதியின் ஆலோசனைப்படி ஸ்டாலினை துணை முதல்வராக ஆளுநர் பர்னாலா நியமித்துள்ளார்.
ஸ்டாலினுக்கு மனைவி துர்காவும், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, பேரன் இன்பன் உள்ளனர்.
அதிகரிக்கும் பளு… திமுகவில் பொருளாளர் பதவியுடன், இளைஞரணி செயலாளர் பொறுப்பை ஸ்டாலின் கூடுதலாக கவனித்து வருகிறார்.
துணை முதல்வர் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளதால், வேலை பளு அதிகரிக்கும் எனவும், இளைஞரணியில் குறிப்பிடத்தக்க அளவு கவனம் செலுத்துவது இயலாததாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன. இதனால், இளைஞரணி பொறுப்பு துடிப்புள்ள வேறொருவர் வசம் ஒப்படைக்கப்படலாம் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Thalapathi M.K.Stalin is a man well known for his political tolerance. He was chiseled and shaped by his political enemies only.The physical torture he sustained during his incarceration in the emergency period is the starting point of his elevating gradient.He is entitled to any honour as he was duly tilled in the orchard of Dr. Kalaignar.
He rightly proved his ability in every walk of life. As an eloquent orator, a prolific writer, a sincere legislator, an active Mayor,and as a dutiful versatile Minister he registered his capability. The political decency he is maintaining ought to be appreciated.
No man needs pretension to perform like his father. His ability is sealed with his blood. yes, Thalapathy richly deserves this elevation to the post of the Deputy Chief Minister. of Tamil Nadu.