படுத்துக்கொண்டே ஜெயித்த கலைஞர்..- தட்ஸ்தமிழ் புகழாரம்!

சென்னை: 85 வயதாகும் முதல்வர் கருணாநிதிக்கு, இந்த லோக்சபா தேர்தல் முடிவுகளை மறக்கவே முடியாது. அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி, திமுக கூட்டணிக்கு எதிர்பாராத வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்து விட்டன அவரது அரசியல் சாதுர்யமும், அட்டகாச காய் நகர்த்தல்களும்.

நேற்று வரைக்கும் இப்படிப்பட்ட ஒரு முடிவு வரும் என கருணாநிதி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.

தனது உடல் நலிவையும் தாண்டி மிக அசாத்தியமான தன்னம்பிக்கையையும் தனது அரசின் சாதனைகளையும் மட்டுமே முன்நிறுத்தி தேர்தலை சந்தித்து வெற்றியை ஈட்டிக் காட்டியிருக்கிறார்.

ஈழத் தமிழர் பிரச்சனை தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற ரீதியில் எழுந்த பேச்சுக்களும், எழுதப்பட்ட செய்திகளும், கணிக்கப்பட்ட கணிப்புகளும் பொய்யாகி திமுக கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறி விட்டன. குறிப்பாக மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி பலத்த அடி வாங்கியுள்ளது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முதல்வர் கருணாநிதி, பிரசாரத்திற்குக் கூட போக முடியாத நிலை. திருச்சி பிரசாரக் கூட்டத்தில் மட்டுமே அவர் பங்கேற்றார். ஆனால், இதனால் ஏற்பட்ட முதுகுவலி-காய்ச்சலால் மருத்துவமனையில் படுத்திருந்தபடி தன்னைச் சுற்றி நடந்து வந்த அரசியல் நிகழ்வுகளை மெளனமாக கவனித்த்தபடி, தனது தளகர்த்தர்களுக்கு செயல் திட்டங்களை மட்டும் போட்டுத் தந்துவிட்டு அமைதி காத்தார்.

இன்றைய முடிவுகள் முதல்வர் கருணாநிதிக்கு நிச்சயம் பெரும் நிம்மதியைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பெரியார் முதல் ஜி.கே.வாசன் வரை எத்தனையோ தலைவர்களுடன் பழகியுள்ள முதல்வர் கருணாநிதிக்கு இன்றைய வெற்றி கடந்த தேர்தலில் கிடைத்த 40க்கு 40 வெற்றியைவிட மிக இனிப்பானது.

இந்த வெற்றியின் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளார் கருணாநிதி.

முதல் மாங்காய் – பாமகவின் உதவி இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை தூள் தூளாக தகர்த்து எறிந்தது.

2வது மாங்காய் – ஈழத் தமிழர் பிரச்சினையால் திமுகவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற வாதத்தை பொய்யாக்கியது.

3வது மாங்காய் – அதிமுக வென்றால் அக்கட்சியின் பக்கம் காங்கிரஸ் போய் விடக் கூடும் என்ற சூழ்நிலையை இந்த வெற்றியின் மூலம் தடுத்து நிறுத்தியது.

4வது மாங்காய் – தனது மூத்த மகனும், தென் மாவட்ட திமுக அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரிக்கு அரசியலில் அபாரமான இருக்கையைப் போட்டுக் கொடுத்தது.

இப்படி பல பலன்களை திமுகவுக்குக் கொடுத்துள்ளார் கருணாநிதி.

60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி பார்க்காத ஏற்ற, இறக்கங்கள் இல்லை. ஆனால் அத்தனையையும் அவர் ஒரே மனோபாவத்தில் எடுத்துக் கொள்வதுதான் வழக்கம்.

சவால்களை சந்திப்பது கருணாநிதிக்கு கை வந்த கலை. 1969ம் ஆண்டு காங்கிரஸ் பிளவுபட்டு, அதன் மூத்த தலைவர்கள் இந்திரா காந்தியை தனிமைப்படுத்தியபோது, தனது 25 எம்.பிக்களையும் இந்திராவுக்கு ஆதரவாக நிற்க வைத்தவர் கருணாநிதி.

1971ம் ஆண்டு லோக்சபாவை கலைத்து தேர்தலுக்கு உத்தரவிட்டார் இந்திரா காந்தி. இதையடுதது துணிச்சலுடன் சட்டசபையைக் கலைத்து தேர்தலுக்கு தயாரானார் கருணாநிதி. அந்தத் தேர்தலில் கருணாநிதி கடைப்பிடித்த உத்தியால், திமுக வரலாறு காணாத வகையில், 182 சீட்களில் வெற்றி பெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

பின்னர் இந்திரா காந்தி அவசர கால நிலையை அறிவித்தபோது அதை கடுமையாக எதிர்த்தார் கருணாநிதி. ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தலைவர்களுக்கு அவர் புகலிடம் கொடுத்தார்.

இதேபோல கருணாநிதி எடுத்த முக்கியமான,அதிரடி முடிவுகளில் ஒன்றுதான் எம்.ஜி.ஆரை. கட்சியிலிருந்து நீக்கியது. ஆனால் அது அவருக்கு எதிராக திரும்பியது. அதிமுகவை உருவாக்கி கருணாநிதிக்கு பெரும் சவாலாக மாறினார் எம்.ஜி.ஆர்.

1989ம் ஆண்டு தேசிய முன்னணி உருவானபோது, முதல் முறையாக சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்தனர் வட இந்திய தலைவர்கள். அதற்கு முக்கிய காரணம் கருணாநிதிதான். சென்னை மெரீனா கடற்கரையில் தனது நெருங்கிய நண்பரான வி.பி.சிங்கை முன் நிறுத்தி மிகப் பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார் கருணாநிதி.

அதுதான் இன்று வட இந்திய அரசியலை பிராந்தியக் கட்சிகள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதற்காக போடப்பட்ட முக்கிய அடிக்கல்.

வி.பி.சிங் அமைச்சரவையில் முரசொலி மாறன் அமைச்சராக இடம் பிடித்த பின்னர் தேசிய அரசியலில் திமுகவின் பங்கு முக்கியமாக மாறியது.

1989ம் ஆண்டுதான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு (எம்.ஜி.ஆர். மறைந்த பின்னர்) 3வது முறையாக முதல்வரானார் கருணாநிதி.

இந்த அரசு சந்திரசேகர் புண்ணியத்தால் ஒன்றரை வருடமே நீடித்தது. பின்னர் ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பின்னர் நடந்த தேர்தலில் திமுக படு தோல்வியைச் சந்தித்தது. கருணாநிதி மட்டும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருப்பினும், அடுத்த சட்டசபைத் தேர்தலில் திமுக விஸ்வரூபம் எடுத்தது. 1996ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது திமுக. கருணாநிதி 4வது முறையாக முதல்வரானார்.

பின்னர் 2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் திமுக தோல்வியைச் சந்தித்தது.

இருப்பினும் 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இருப்பினும் தமிழ அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக கூட்டணி ஆட்சியை மக்கள் கொடுத்தனர்.

போராட்டங்களையே தனது வாழ்க்கைக் களமாக மாற்றிக் கொண்டு விட்ட கருணாநிதி, இந்தத் தேர்தலையும் கூட ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் சந்தித்தார்.

கூட்டணி கட்சிகள் பிரிந்து போனது, பல முனைகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது, விலைவாசி உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் அதிருப்தி, ஈழத் தமிழர் பிரச்சினை, எல்லாவற்றுக்கும் உச்சமாக, உடல் நலிவு, பிரசாரத்திற்குக் கூட போக முடியாத நிலை என பல பிரச்சினைகளை திமுக கூட்டணி சந்தித்தபோதிலும், யாரும் எதிர்பாராத வகையில், சிறப்பான வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார் கருணாநிதி.

கடந்த முறை பெற்ற 40 சீட்களையும் திமுக கூட்டணி பெற முடியாவிட்டாலும் கூட, அதிமுக கூட்டணியை முந்த விடாமல் தடுத்து வென்றதே ஒரு சாதனைதான்.

அவ்வளவுதான் என்று எல்லோராலும் கருதப்பட்ட திமுக கூட்டணியின் அரசியல் எதிர்காலத்தை கருணாநிதியின் அணுகுமுறையும், அனுபவ அரசியலும் பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழ வைத்துள்ளது.


Thanks தட்ஸ்தமிழ்

Advertisements

போடுங்கம்மா ஓட்டு….ரெட்டை எலையப் பாத்து…!

அரசு ஊழியர்களே…..

ஒரே கையெழுத்தில் உங்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிய பெருமை வாய்ந்த ரெட்டை இலைக்கே உங்கள் ஓட்டு…..!!!

போக்குவரத்து கழக ஊழியர்களே……..

உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியத்தையும் , போனஸ்ஸையும் தர மறுத்த ரெட்டை இலைக்கே உங்கள் ஓட்டு….!

பெரியாரின் சீடர்களே……….

தான் ஒரு பாப்பாத்தி என்று சபையிலேயே அறிவித்துக் கொண்ட அதிமுகவின் பார்ப்பனத் தலைமைக்கும் , இன்று வரை பாரதிய ஜனதாவின் குரலில் , பார்ப்பனீயத்தின் குரலை எதிரொலிக்கும் ரெட்டை இலைக்கே உங்கள் ஓட்டு….!

தமிழுணர்வாளர்களே…..

வருடக்கணக்கில் புலிகள் என்ற பேச்சை எடுத்ததற்கே சிறையில் வைகோவை சிறையில் அடைத்த அம்மாவுக்கே உங்கள் ஓட்டு.

எம்.ஜி.ஆரின் சீடர்களே….

எனக்கு எல்லாமே எம்.ஜி.ஆர். தான் என்று ஒப்பாரி வைத்த ஜெயலலிதாதான், அவர் உயிருடன் இருந்தபோதே அன்றைய பிரதமர் அமரர் ராஜீவ்காந்திக்கு எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்க லாயக்கற்றவர் என்று கடிதம் எழுதி உண்ட வீட்டிற்கு துரோகம் இழைத்த ஜெயலலிதாவுக்கே உங்கள் ஓட்டு…!

தமிழகத் தமிழர்களே…….

விடுதலைப்புலிகளால் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடுகிறது என்று பொய்ப்பிரச்சாரம் செய்து , அத்தகைய புலிகளுக்கு ஆதரவு அளிக்கிற ஆட்சி திமுக என்று சொல்லி ஆட்சியைக் கலைக்க வைத்து புலிகளின் மீதான தடையை இந்தியாவில் முதலில் அங்கீகரித்து இன்றளவும் புலிகளின் தலைமையை வெறுத்து ஒதுக்கும் அதிமுகவுக்கே உங்கள் ஓட்டு…!!!!

‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி-தலைவர் பிரபாகரனைப் பிடித்து இங்கே கொண்டு வரவேண்டும்’ என்று தீர்மானமும் நிறைவேற்றிய அதிமுகவுக்கே உங்கள் ஓட்டு…!!!!

கம்யூனிஸ்டுகள் ஈழத்தமிழர்களுக்காக நடத்திய உண்ணாவிரதத்தில் விஜய்காந்த் கட்சியும் கலந்து கொண்டது என்ற காழ்ப்புணர்வு காரணமாக எவ்வித அக்கறையும் இன்றி புறக்கணித்த அதிமுகவுக்கே உங்கள் ஓட்டு….!!!

தமிழ்ச்செல்வன் மறைவிற்காக ஒரு இரங்கற்பா எழுதிய காரணத்தால் கலைஞரின் ஆட்சியையே கலைக்க வேண்டும் என்று வலியுறுத்திய ரெட்டை இலைக் கட்சிக்கே உங்கள் ஓட்டு.!!!!

ஈழத் தமிழர் என்று சொல்வதைக் கூட சகித்துக்கொள்ளாமல் , இலங்கைத் தமிழர் என்றுதான் சொல்ல வேண்டும் என்று திமிராகப் பேசிய அதிமுக தலைமைக்கே உங்கள் ஓட்டு.

சற்றேறக்குறைய ஒரு லட்சம் தமிழ் மக்களைப் பலி கொண்ட ஒரு போராட்டத்தை இதுகாறும் கொச்சைப்படுத்தி விட்டு , ஒற்றை இரவில் ஒரு சி.டி.யைப் பார்த்து புரிந்துகொண்டதாகப் புழுகும் அதிமுகவுக்கே உங்கள் ஓட்டு….!!

இன்றளவும் தமிழகத்தின் எந்தவொரு பெரிய கட்சியையும் புலிகளுக்கு ஆதரவாக , ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதையோ , எழுதுவதையோ , ஒரு பேரணி நடத்துவதையோ அன்றாடம் எதிர்த்துக்கொண்டு, ஈழ ஆதரவினை முணை மழுக்கிக்கொண்டு , ஈழ விடுதலைப் போருக்கு ஒரு தடுப்புச் சுவராக நின்று கொண்டு , ஆயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்யும் சிங்களத்துக்கு உதவிக்கொண்டு சிங்கள ரத்னாவாகக் காட்சியளித்த ஜெயலலிதாவுக்கே உங்கள் ஓட்டு.!!!!!

போடுங்கம்மா ஓட்டு………………………………..

ரெட்டை இலையைப் பார்த்து………!!!!!

வெய்யுங்கம்மா வேட்டு…..

தமிழினத்தின் எதிர்க்காலத்தைப் பார்த்து….!

சொருகுங்கம்மா ஆப்பு……….

தமிழ்நாட்டு முன்னேற்றத்தைப் பார்த்து…….

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு….!!!

நம்ம மாக்களுக்கு ?

பெரியாரின் மூத்திரச்சட்டியும் , கலைஞரின் உடல்நிலையும்!

எத்தனை ஏளனப் பேச்சுக்கள்.?

பயந்து போய் அப்பல்லோவில் ஒளிந்து கொண்டாராம்.

சோனியாவும் , இவரும் ட்ரங்க்கால் போட்டுப் பேசி செருப்படி வாங்காமல் தப்பித்துக்கொண்டார்களாம்…….

ஒரு முதியவர் , 85 வயதைத் தாண்டியவர். அறுபது ஆண்டுகளாக நமது உரிமைகளுக்காகப் போராடியவர்.

இன்றைக்கும் தமிழகத்தின் முதல்வராக இருப்பவர். தமிழக சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தி.மு.கழகத்தின் தலைவராக இருப்பவர்.

இவரை இப்படியெல்லாம் ஏசுவது பகுத்தறிவின் குரலா ? பெரியார் கற்றுத்தந்த சுயமரியாதையின் குரலா ? இருக்க முடியாதே….!

காரணம் என்ன சொல்கிறார்கள் ?

காங்கிரசின் தமிழின அழிப்பிற்கு துணை போனாராம்….!

ஆமாம் , இராஜபக்சேவின் குரலை தமிழகத்தில் ஜெயலலிதா அவர்கள் பேசிய போது இதே நெடுமாறன் கருப்புக்கொடி காட்டினாரா ?

இன்றைக்கு கலைஞரின் உடல்நலமின்மையைக் கூட கொச்சைப்படுத்தும் வைகோ அவர்கள் ஜெயலலிதாவை இடித்துரைத்தாரா ?

இதே பெரியார் திராவிடர் கழகம் , இன்று இண்டு இடுக்கெல்லாம் “போடுங்கம்மா ஓட்டு…..ரெட்டை எலையை பார்த்து….” என்று கூவுகிறதே…………………………………………….

ராமர் பாலம் இருக்கிறது என்று சொல்கிறதா என்ன ?

வீரமணியை சமரசங்களுக்கு உட்பட்டு பகுத்தறிவை அடகு வைத்து விட்டார் என்று சொல்லித்தானே திராவிடர் கழகத்தை உடைத்தீர்கள்??? இன்றைக்கு பார்ப்பனீயத்தின் தமிழகக் கிளையான ஜெயலலிதாவை ஆதரிப்பதென்பது சமரசங்களுக்கு உட்பட்டது ஆகாதா ?

உயரிய நோக்கங்களுக்காக நாம் பெரிதும் மதித்த தந்தை பெரியார் திராவிடர் கழகம் இன்று நம் கண் முன்னால் அதனுடைய பொலிவினை இழந்து நிற்கிறதே………..

நீங்கள் அரசியல் காரணங்களுக்காக என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள்.

கலைஞரின் முதுமையை, அவரது உடல்நிலையை விமர்சிப்பது கொஞ்சமேனும் சகிக்கவில்லை.

அத்தகைய விமர்சனங்கள் பெரியாரின் மூத்திரச்சட்டியை இதே இனம் சுமந்து வீதிவீதியாக சென்ற போது பார்ப்பனீயம்  வைத்த விமர்சனங்கள் போன்றதே.

இந்தத் தேர்தல் , திமுகவிற்கு முதல் தேர்தல் – ஆம்…

கலைஞர் என்னும் ஆளுமையின் முழு வீச்சின்றி , முழு பிரச்சாரமின்றி , முழு உழைப்பின்றி கழகம் சந்திக்கும் முதல் தேர்தல். திமுகவின் கொள்கைகளால் , கலைஞர் என்னும் ஆலமரத்தின் விழுதுகள் நாங்கள் வென்று காட்டுவோம்.

தமிழினத்தின்  துரோகிகள் யார் என்பதை காலம் சொல்லும்….

ஆம் காத்திருங்கள் காலம் சொல்லும்..!

அன்றும் திமுக தமிழர்களுக்கு காவலரணாகத்தான் நிற்கும்…!!!

தை ஒன்றே தமிழ் புத்தாண்டு….பேரிகை கொட்டி வரவேற்போம் !!

தை ஒன்றே தமிழ்ப்புத்தாண்டு என்று தமிழக அரசு முழுதுமாய் சட்டமியற்றி அதன்படி கொண்டாடப்படும் முதல் தமிழ்ப்புத்தாண்டு வரும் தைப்பொங்கல் தினமேயாகும்…..!!!

பல நூறு வருடங்களாய் ஆரியப் பழக்கத்தினால் தமது வருடப்பிறப்பைக் கூட அறியாமல் , இருளில் மூழ்கியிருந்த தமிழினம் இந்த ஆண்டு முதல் தமது உண்மையான புத்தாண்டை கொண்டாடவிருக்கிறது…………

இன்னும் இரண்டே மாதங்கள்தான் இடைவெளி…….

ஆண்டாண்டு காலமாய் அடியொற்றி வந்த மூடப்பழக்கத்தை ஏதோ சில சட்டங்கள் போட்டு மட்டும் மாற்றிட முடியாது……ஆனாலும் , எந்த அடிப்படையைக்கொண்டு இந்த தை ஒன்று தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது என்ற உண்மையை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதன் மூலமே தமிழுணர்வெழுச்சியுடன் நாம் நமது தொலைந்த அடையாளங்களை எளிதே மீட்க முடியும்!!!

உங்களில் சிலர் கீழே கண்ட திரு.சபேசன் அவர்களின் கட்டுரையை படித்திருக்கக்கூடும்…எனினும் , மீண்டும் ஒரு முறை உங்கள் பார்வைக்காக

சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டா?

சித்திரை மாதத்தில் ‘பிறப்பதாகச்’ சொல்லப்படும் இந்த ஆண்டுப் பிறப்புத்தான் தமிழர்களின் புத்தாண்டா? பல்லாயிரம் ஆண்டுப் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டுள்ள தமிழினத்தின் புத்தாண்டு, சித்திரை மாதத்தில்தான் வருகின்றதா? இந்த ஆண்டுப் பிறப்பு உண்மையில் தமிழர்களின் ஆண்டுப் பிறப்புத்தானா?

இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் (?) ஆரம்பமாகவுள்ள இவ்வேளையில் வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை குறித்தும் கருத்தில் கொள்ள விழைகின்றோம்.

இப்போது வழக்கத்தில் உள்ள ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது பற்சக்கர முறையில் உள்ளதைக் கவனிக்கலாம். அறுபது ஆண்டுகள், பற்சக்கர முறையில் திரும்பித் திரும்பி வருவதை நாம் காண்கின்றோம். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பரபவ முதல் அட்சய என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!

இந்த அறுபது ஆண்டுப் பற்சக்கர முறை குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள். கனிஷ்கன் என்ற அரசனாலும் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு பற்சக்கர முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் சஷ்டி பூர்த்தி என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழமையும் இருக்கின்றது.

மேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

“ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை ‘நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா?’ என்று கேட்டார். அதற்குக் கண்ணன், ‘நான் இல்லாத பெண்ணை வரிக்க’ என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி ‘நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்’ என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ முதல் அட்சய’ இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.”

(அனைவரும் ஆண்களே, பெண்கள் எவரும் இல்லை)

தமிழனும் தன்னை மறந்ததால் ஆண்டு ‘வருடமாகி’ விட்டது. வடமொழியில் ‘வர்ஷா’ என்றால் பருவகாலம், மழைக்காலம் என்று அர்த்தம். உலகெல்லாம் வாழுகின்ற இனத்தவர்கள் தத்தமக்குரிய ஆண்டுப் பிறப்பில் தான் நற்பணிகளை தொடக்குகிறார்கள். ஆனால் இந்த சித்திரைப் பிறப்பில் தமிழர்கள் திருமணம், தொழில் தொடக்கம் போன்ற எதையுமே செய்வதில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு முறை’ குறித்துப் புரிந்து கொள்ளுதல் இவ்வேளையில் பொருத்தமானதாக இருக்கக் கூடும். ”தமிழன் இயற்கையை வணங்கி வந்தவன். ‘மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை’ இவை மாறி மாறிப் பருவ காலங்களில் மனிதனை ஆண்டு வந்ததால் இக் காலச் சேர்வையைத் தமிழன் ‘ஆண்டு’ என்று அழைத்தான் ” என்று திரு வெங்கட்ராமன் குறிப்பிடுகின்றார். மேல்நாட்டு அறிஞர் சிலேட்டர் என்பவர் தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்று கூறியுள்ளார். தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் காணப்படும் வானியற் செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆரியர் ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள், வானியலில் அரும் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கத்தையும், பருவங்களையும் அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (யு ளுழஉயைட ர்ளைவழசல ழக வாந வுயஅடைள-Pயசவ 1)

தமிழகத்தில் வானியலில் வல்ல அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.

தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு – அதாவது 24 மணித்தியாலங்களோடு – அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக்குரியது)

2. முதுவேனில் – (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியது)

3. கார் – (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)

4. கூதிர் – (ஆடி – ஆவணி மாதங்களுக்குரியது.)

5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)

6. பின்பனி – (கார்த்திகை – மார்கழி மாதங்களுக்குரியது)

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் – தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.

இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.

“சித்திரை வருடப்பிறப்பு” என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது….. …….. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? – தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .

– என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

அப்படியென்றால் தமிழனின் புத்தாண்டு – உண்மையான – சரியான- வரலாற்று ரீதியான புத்தாண்டுத் தினம்தான் எது?

தமிழனுக்கு ‘வருடம்’ ‘பிறப்பதில்லை.’
‘புத்தாண்டு ஆரம்பமாகின்றது.’

அந்தத் தினம் தான் எது?

“தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.”

பொங்கல் திருநாள் தமிழரின் தனிப்பெரும் திருநாள் ஆகும்.
பொங்கல் திருநாளைத் தமிழர்கள் ‘புதுநாள்’ என்று அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது, போக்கு – போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகியது- போகி) பொங்கல் என்பது பொங்குதல் – ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது.

தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம், உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம் உழைப்பையும், தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியை ‘புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்’ -என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.

தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பல கோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக (ஜ)யப்பானிய மக்களின் புத்தாண்டை தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.

தை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களை தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில் குழுNமுயுசுயு – குழுNமுயுசுயு – என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.

தை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்கு படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களை தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.

பருப்புத் தவிடு பொங்க – பொங்க
அரிசித் தவிடு பொங்க – பொங்க

-என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் ‘பொங்க-பொங்க’ என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில் ‘ர்ழுNபுயு-ர்ழுNபுயு’ என்றே பாடுகிறார்கள்.

அன்புக்குரிய வாசகர்களே! நேரம் கருதி சில விடயங்களை மட்டும் இங்கே உதாரணத்துக்கு காட்டினோம். தமிழனின் புத்தாண்டு தைப்பொங்கல் தினம்தான்! ஆனால் தற்போதைய நிலைமை என்ன?

அன்றைய தமிழன் நிலத்தை உழுதான். அந்த நிலத்தையும் ஆண்டான். அதனூடே தன் பண்பாட்டையும், நாகரீகத்தையும் உயர்த்தினான். இயற்கையோடு ஒன்றி, இயற்கையை வழிபட்டான். இயற்கைக்கு நன்றியும் தெரிவித்தான். அவனது மாண்பு மிகு வாழ்வில் எந்த ஓர் அங்கத்திலும் மண்ணின் மாண்பு மிளிர்ந்தது. அது மண்ணை ஒட்டியே மலர்ந்தது. அந்த மண் நமக்குரியதாக இன்று இல்லாததால், நமது பண்பாட்டுப் பெருமையும் நம்மை விட்டு மறைந்து வருகின்றது.

இதற்கு ஓர் உதாரணமாக இந்தச் சித்திரை வருடப் பிறப்பை சுட்டிக் காட்டலாம்.

தனித்துவமான மொழியைப் பேசுகின்ற தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள் ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது.

இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அன்புக்குரிய வாசகர்களே! இன்றைய நடைமுறை யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டித் தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில் எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார்? எவரும் – எதையும் – எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாகச் சொல்லட்டும். – “தமிழனை வென்ற, ஆரியப் புது வருடப் பிறப்பு”

இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன. முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், தமிழர் நாகரிகமும் பண்பாடும, ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு- மலேசிய சிறப்பு மலர், தமிழர் யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்களும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள்.

—-

இந்த நீண்ட கட்டுரை தை ஒன்றே தமிழ்ப்புத்தாண்டு என்பதை தெளிவுற விளக்குகிறது…உண்மை தெரிந்து நம்மால் இயன்ற வரை பரப்புரைகளை மேற்கொள்வோம்!!!!!

தொலைந்த நமது அடையாளங்களை மீட்டெடுப்போம்!!!