அரசியலுக்கான திறவுகோல் கோடம்பாக்கத்திலா?

“கேட்ல என்ன தகராறு வாட்ச்மேன்???…. ஒரே சத்தமா இருக்கு ? ” இப்படிக்கேட்கிறார் ஒரு பிரபல சினிமா தயாரிப்பாளர்………

“அய்யா , ஏதோ கட்சி ஆரம்பிக்கணுமாம் , அதுக்குத்தான் உங்ககிட்ட வாய்ப்புக் கேட்டு வந்திருக்கிறேன்னு ஒரே ரகளை பண்ணறான் சார் இந்த ஆளு , போகச் சொன்னா போக மாட்டேன்கிறான்…” என்கிறார் அந்த வயதான வாட்ச்மேன்….

அரசியலுக்கு வர , என்கிட்ட என்ன எதிர்ப்பார்க்கிறான் அவன் என்ற ஆச்சரியத்தில் , உள்ள அனுப்புப்பா , என்னன்னு கேட்கலாம் என்றவர் , உள்ளே வந்த அவனை ஏறிட்டுப் பார்த்தார்…….சற்றே கலைந்த தலை , தமிழனின் நிறம் , மடித்துவிடப்பட்ட பட்டு வெள்ளைச்சட்டை – இத்யாதி இத்யாதி ……  கொஞ்சம் வசதிப்பட்டவன் போலவே தெரிந்தான்!!!

“என்னப்பா வேணும்?? ” தயாரிப்பாளர்

“அய்யா , நம்மூரு , கோயமுத்தூருப்பக்கம் , நல்ல தோப்பு தொரவு இருக்கு , எங்க தொகுதியில எம்.எல்.ஏ வுக்கு நிக்கணும்னு எங்க ஆத்தாவுக்கு ரொம்ப நாளா ஆசை…ஆனா எந்தக்கட்சியும் சேந்தவுடனே எம்.எல்.ஏக்கு நிக்க வாய்ப்பு தர மாட்டேன்கிறாங்க…அதனால தான் எங்காத்தா உங்களை பாத்து ஒரு படத்துலயாவது ஹீரோவா நடிச்சிட்டா அல்லாக் கட்சிக்காரங்களும் வூட்டு வாசல்ல வரிசையா நிப்பாங்க அப்படீன்னு சொல்லிச்சி…ஒரு படத்துல நடிக்க வாய்ப்பு கொடுங்கையா ” அப்படீன்னு சொன்னானாம்!!!!!!

இது வெறும் கதையாக இருக்கலாம் , இப்படியெல்லாம் நடக்குமா என்று நீங்கள் கேட்கலாம்…… இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று நீங்கள் அடித்துச் சொல்லலாம்..!!!!!

ஆனால் சற்றேறக்குறைய அதுதான் தமிழக அரசியலில் நடந்து கொண்டிருக்கிறது……

புரட்சியேதும் செய்யாத புரட்சிக்கலைஞர் நம்பவே இயலாத கட்டுக்கதைகளையும் , புரட்டுக்களையும் சொல்லி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்….

சாதியின் வலுவில் கட்சி ஆரம்பித்த ஒரு நடிகர் தன் கட்சியின் பேரில் மட்டுமே சமத்துவமிருந்தால் போதும் என்ற நம்பிக்கையில் களம் காணத் துடிக்கிறார்…

நாடாளும் மக்கள் கட்சி என்ற நாமக் கட்சியின் தலைவரும் ஒரு நடிகர்தான்..வெகு நாளாய் பிஸ்வாஸின் அறிவுறுத்தலால் தும்மிக்கொண்டிருந்த அவர் , பிஸ்வாஸ் தும்ம அனுமதிக்கவில்லை என்று சொல்லி தனிக்கடை தொடங்கியிருக்கிறார்…..

கொள்கைகளையும் , கோட்பாட்டையும் கொண்டு திராவிடம் வளர்த்த தமிழ் இளைஞர்கள் இன்று ஒரு நடிகன் கட்சி ஆரம்பிக்கவில்லையென்றால் தீக்குளிப்போம் என்று சூளுரைக்கிறார்கள்……

இந்தியாவின் பழம் பெரும் கட்சியான பொதுவுடமைக் கட்சி விஜயகாந்தோ , சரத்குமாரோ தன்னை கூட்டணி சேர்த்துக்கொள்வார்களோ என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றன…இதில் அடிக்கடி , கொள்கை , கொள்கை என்ற ஒப்பாரி வேறு….

இந்தியாவை ஆளப்போகும் அல்லது வாய்ப்புள்ள அத்வானி அவர்கள் ஒரு நடிகரின் வீட்டுக்கே போய் வந்துவிடுங்கள் எங்கள் கட்சிக்கு என்று வாழ்த்துப்பா பாடுகிறார்….!!!!

இன்றைக்கு அரசியலில் தலைவனாக அடிப்படைத் தகுதியே சினிமா என்றாகிவிட்டது போன்றதொரு தோற்றம் இருக்கிறது என்பது வெளிப்படை…

இதெல்லாம் , எம்.ஜி.ஆரில் ஆரம்பித்தது…அவர் செய்த / செய்யாத பணிகளை விட்டுவிடுவோம்….தமிழக அளவில் , ஏன் இந்திய அளவிலேயே , சினிமாவின் மூலம் மக்களை மயக்கிவிட முடியும் , எந்தவொரு பெரிய கொள்கையுமின்றியே மக்களைத் தொடர்ச்சியாக ஆள முடியும் என்பதற்கான தவறான உதாரணம் அவர்தான்……அவரது கலருக்கு மயங்கி ஓட்டுப்போட்டவர்களிடம் வேறெந்த பகுத்தறிவையும் எதிர்ப்பார்ப்பது மூடத்தனம்தான்…..

அதன்பிறகு , தமிழக அரசியலின் மிக மோசமான கால கட்டத்தின் ஆரம்பமான ஜெயல்லிதா……..எம்.ஜி.ஆர் திரையில் ஆடிய (? ) போது அவர் கூட ஆடியதைத் தவிர வேறெந்த தகுதியுமே தேவையில்லை என்ற மாபெரும் தத்துவத்தின் எச்சமான அவர் மொத்த தமிழக அரசியலையுமே சகதியாக்கி விட்டார்…

இதில் கூத்தென்னவென்றால் , அவர் திமுகவைப் பார்த்து ஒரு குடும்ப ஆதிக்கம் என்பதுதான்……….அவர் இருக்கும் கட்சி எப்படிப்பட்டதென்றால் ஒரு தலைவர் இறந்தபிறகு , அத்தலைவருடன் கூட ஆடிய ஒருவரும் , தனது மனைவியும் பங்கு போட்டுக்கொண்ட ஒரு கட்சியை , பின்பு ஒரு சில தகிடுதத்தங்களால் தமது ஆதிக்கத்தை கட்சியில் வலுப்படுத்திக்கொண்ட அவர் , தனது கட்சியையே தனது தோழியின் குடும்ப பராமரிப்பில் விட்டு வைத்திருக்கும் அவர் கழகத்தை பார்த்து குற்றஞ் சாட்டுகிறார்…… நிற்க , இது அது பற்றிய பதிவல்ல!!!!

எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா , விஜயகாந்த் , சரத்குமார் , கார்த்திக் இப்படி இந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவு விஜய் அவர்கள்……….

யாரும் அரசியலுக்கு வர இங்கே தடையில்லை…ஆனால் அவர்களின் நோக்கமும் , அத்தகைய நடிகர்களின் பின்னால் இருக்கும் மூடத்தனமான ரசிகர் பின்புலமுமே நம்மைக் கவலையுடன் இப்பிரச்சினையை அணுக வைக்கிறது….

நான்கைந்து படம் ஹிட்டானவுடனே , ரசிகர் மன்றம் ….

ஏதாவதொரு இடத்தில் புகலிடம் தேடத்துடிக்கும் ரசிகப்பட்டாளங்கள்…

தமக்கென ஒரு அடையாளத்துடன் , கொள்கையளவில் கொஞ்சம் கூட ஒட்டாமல்  ஒன்று சேர்ந்தவர்கள்….

எந்தவித தொலை நோக்குமற்ற தங்களது வழிகாட்டிகள்……..

அரசியலின் எந்தவொரு நாகரீகமுமற்ற , முதிர்ச்சியுமற்ற மாநிலத் தலைமைகள்…….

அவர்களின் தலைவரோ , மக்களின் உணர்வுகளையோ , மக்களின் இயல்பு நிலைமைகளையோ நேர் நின்று பார்க்காதவர்கள்…நமது எண்ணங்களை கொஞ்சமும் பிரதிபலிக்காதவர்கள் , அதற்கு சரியான உதாரணம் , மொத்த தமிழகமும் , ஈழம் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது 2011 ல் முதல்வராக துடிக்கும் ஒருவர் அது பற்றி பேசுவதே இல்லை…சொல்லப்போனால் இன்று வரை அவரது நிலை என்னவென்று யாருக்குமே தெரியவில்லை…

இப்படி ஒட்டுமொத்தமாக தவறான வழிகாட்டுதலிலும் , தங்களுக்கு ஏதேனும் பதவி கிடைக்கும் என்ற நப்பாசையில் கட்சியில் இணையும் , கட்சியை நடத்தும் நடிகர்களாலும் , ரசிகர் பட்டாளங்களாலும் நாடு மேலும் நாசமாகப் போவது மட்டும் உண்மை!!!

அதற்குள் தமிழக மக்கள் விழித்துக்கொண்டு இத்தகைய சமூக புற்றுநோயை இப்போதே வேரறுக்க வேண்டியது அவசியத்தேவை..!!!

ஆனால் , மாற்றாக தமிழக மக்கள் அத்தகையவர்களை ஊக்குவித்துக்கொண்டே இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை…நேற்றைக்கு எம்.ஜி.ஆர் , இன்றைக்கு ஜெயலலிதா , நாளைக்கு ( க்யூவில் பலருண்டு , யார் வெல்வர் , யார் வீழ்வர் என்பது மக்கள் நம்பும்படி யார் தெளிவாக பொய் சொல்கிறார்கள் என்பதைப்பொறுத்தே )

ஜனநாயகத்தின் முக்கிய தூண்களான பத்திரிகைகளோ , நடுநிலையுடன் எது நியாயம் என்று மக்களுக்கு புரிய வைக்க வேண்டிய முக்கிய இடத்தில் இருக்கின்றன….ஆனால் , தமது கடமையை மறந்து தமது விற்பனைக் கொள்கையை மட்டுமே முன்னிருத்தி பரபரப்புக்காக நடிகர்களைப் பற்றிய செய்திகளை போட்டு பணம் பண்ணிக்கொண்டிருக்கின்றனர்….

சமூகத்தின் அவலத்தை மேலும் கொடுரமாக்கப்போகும் இது போன்ற சமூகப்பிரச்சினைகளிலாவது தமிழுணர்வாளர்கள் தமது சார்பு நிலை மறந்து ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும்!!!!!

அதுவே நமது விருப்பமும் , சமூக ஆர்வலர்களின் தீராத வேண்டுகோளும் ஆகும்!!!

Advertisements