போர் நிறுத்தம் தான் உடனடித்தேவை – கலைஞர் வலியுறுத்தல்!

போர் நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசை வற்புறுத்துமாறு பிரதமருக்கு கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2008, 02:37.38 PM GMT +05:30 ]
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, அந்நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும் என்று பிரதமரை முதல்வர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் போர் நிறுத்தம் இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டியது எனக் கூறியிருந்தேன். இந்நிலையில் போர் நிறுத்தத்திற்குத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே “இந்திய அரசு நினைத்தால் ஒரே நாளில் இலங்கையில் நடக்கும் சண்டையை நிறுத்திவிட முடியும். இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் உட்கார்ந்து பேசி அரசியல் தீர்வு காண்பதற்கு இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்” என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கைப் பிரச்னைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

அதேபோல், “இனப் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற ஆழ்ந்த நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

ஒன்றுபட்ட இலங்கையின் சட்ட திட்டத்தின்படி தமிழ்ச் சமுதாயம் உள்ளடக்கிய சிறுபான்மையினரின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும்” என்ற கருத்தை வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நாடாளுமன்றத்தில் கடந்த 22-ம் தேதி கூறியுள்ளார்.

இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை அறிவித்து, பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என வலியுறுத்தியே தமிழக அரசின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரின் கருத்துகள் அந்த தீர்மானம் நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளன.

அந்தக் கருத்துகளை நடைமுறைப்படுத்தக்கூடிய தவிர்க்க முடியாத பொறுப்பும், கடமையும் இலங்கை அரசுக்கு உள்ளது. அதனை இந்திய அரசு, இலங்கை அரசுக்கு உணர்த்தி, செயல்படச் செய்வது அவசர, அவசியத் தேவையாகும்.

Advertisements