டோண்டு சார் – இன்னும் இரட்டை வேட “மோடி”தான் பிரதமராக வேண்டுமா?

கொஞ்ச நாளைக்கு முன் டோண்டு சார் , யாரோ ஒரு வட இந்தியர் மோடியைச் சந்தித்தது பற்றி சிலாகித்து எழுதியிருந்தார். மோடி மாதிரி ஒருவர்தான் இந்தியாவின் பிரதமராக வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா குடி முழுகிப் போய் விடும் என்று.

தீவிரவாதம் ,தீவிரவாதம் என்று கூவிக்கொண்டும் , அதற்கு பொடா சட்டத்தைக் கொண்டு வந்தாக வேண்டும் என்றும் கூப்பாடு போட்ட காவிக்கட்சிக்காரர்களின் வேடம் , “புரோகித்”தின் கைதை நியாயப்படுத்தும் போதே ஓரளவு கலைந்துவிட்டது எனலாம்……

இப்போது “புரோகித்” விடயத்தில் எந்நேரமும் தீவிரவாதத்தை மதத்துடன் சம்பந்தப்படுத்தக் கூடாது என்று கூப்பாடு போடும் இவர்கள் எந்நேரமும் இசுலாமிய தீவிரவாதம் என்று கூச்சலிடுவதேன் என்ற கேள்வி இன்னும் அப்படியேதான் இருக்கிறது….

நிற்க , இந்தப் பதிவானது இன்று செய்திகளில் வந்திருக்கின்ற காவிகளின் , மோடிகளின் புளுகு மூட்டையை அம்பலப்படுத்துகின்ற ஒரு செய்தியைப் பற்றியதாகும்…………இனி அச்செய்தியை அப்படியே கீழே கொடுக்கிறேன்..

அப்போது வில்லன்.. இப்போது ஹீரோ-சங் பரிவாரின் ‘நாடகம்’

Hemant Karkare

மும்பை: தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிதியுதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் ஹேமந்தை வில்லனாக சித்தரித்த நரேந்திர மோடி இப்போது அவர் பலியான பின் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு முதலைக் கண்ணீர் விட்டு வருகிறார்.

கர்கரே தான் மலேகாவ்ன் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்து சாத்வி பிரஞ்யா, ராணுவ லெப்டினன்ட் கர்னல், சில சுவாமிகள் ஆகியோர் கைதாகக் காரணமாக இருந்தார்.

இதையடுத்து இவரை வில்லன் போல சித்தரித்தன பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்றவை. குறிப்பாக அத்வானியும் மோடியும்.
இந் நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் நீத்த அவரது பெயரைப் பயன்படுத்தி ஓட்டு வாங்கும் வேலையை பாஜக செய்தது. மும்பைக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் தாக்குதலில் பலியான மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார்.

ஆனால், நாட்டுக்காக கடமை செய்து தவறு செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த தனது கணவரை வில்லனாக சித்தரித்த இவர்களிடமிருந்து எந்த நிதியுதவியையும் பெற மாட்டேன் என ஹேமந்த் கர்கரேவின் மனைவி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

அதே போல தீவிரவாதிகளுடன் சண்டை நடந்து கொண்டிருந்தபோது பாஜக தலைவர் அத்வானி தாஜ் ஹோட்டலுக்கு அருகே வந்து பேட்டி தந்து ராணுவம் என்எஸ்ஜியை எரிச்சலாக்கியதைப் போல, நரேந்திர மோடி தாக்குதல் நடந்து கொண்டிருந்த ஓபராய் ஹோட்டலுக்கு அருகே வந்தையும் ராணுவமும் போலீசாரும் ரசிக்கவில்லை.

அதிகாரிக்கு ஹேமந்த் ரகசிய கடிதம்:

இதற்கிடையே இந்த தாக்குதலில் தான் உயிரிழக்கவும் நேரலாம் என்பதை ஹேமந்த் முன்பே அறிந்திருந்தாரோ என்னவோ தனது முக்கிய அதிகாரிக்கு ஒரு ரகசிய கடிதத்தை அனுப்பிவிட்டுச் சென்றிருக்கிறார்.

தீவிரவாத எதிர்ப்புப் படையில் உள்ள ராகுல் கோவர்தனுக்கு அவர் அனுப்பிய ரகசிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை கோவர்தன் விளக்க மறுத்துவிட்டார்.

மலேகாவ்ன் விசாரணை தொடர்பான சில முக்கிய விவரங்கள் அதில் அடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

தீவிரவாதிகளுக்கு எதிராக தாஜ் ஹோட்டலில் தாக்குதலுக்குக் கிளம்பும் முன் இந்தத் கடிதத்தை கோவர்தனுக்கு அனுப்பிவிட்டு அதை அவருக்கு போனிலும் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் ஹேமந்த்.

சங் பரிவார்-கவலை தெரிவித்த ஹேமந்த்:

இதற்கிடையே முன்னாள் மும்பை போலீஸ் கமிஷ்னர் ரோட்ரிகஸ் கூறுகையில், ஹேமந்த் மறைந்ததின் மூலம் மும்பை போலீசாருக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் தன்னை சங் பரிவார் தவறாக சித்தரிப்பது குறித்து 5 நாட்களுக்கு முன் என்னை சந்தித்து வருத்தப்பட்டார். அதே நேரத்தில் தான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை என்றும் கூறிவிட்டுச் சென்றார்.

மிக நேர்மையான அதிகாரி, இக்கட்டடான கால கடத்தில் அவரை இழந்திருக்கிறோம் என்றார்.

===================================================================

இப்படிப் பட்ட  இரட்டை வேடங்களை வெளிப்படையாக பேணும் மோடியும் , அத்வானியுமே இந்தியாவை முன்னேற்ற முடியும்???

ஒருவேளை , நர மாமிசன் மோடி இந்தியப்பிரதமராகும் சூழல் ஏற்பட்டால் , அனேகமாக இந்தியா ஒரு மாபெறும் சுடுகாடாக வேண்டுமானால் மாற வாய்ப்பிருக்கிறது…

அப்போதும் “டோண்டு” சார் “பிரவீன் தொகாடியா” பிரதமரானால்தான் இந்தியா சுபிக்ஷம் பெறும் என்று சோசியம் பார்த்து சொன்னாலும் சொல்வார்!!!

யார் கண்டது???

பிற்சேர்க்கை –

குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த – அம்பலமாகும் இந்து பயங்கரவாதம் கட்டுரை உங்கள் பார்வைக்கு…

அம்பலமாகும் இந்து பயங்கரவாதம்

30.11.08     ஹாட் டாபிக்
திரிசூலத்தின் முதல் கூறு இஸ்லாமியர்களையும் இரண்டாவது கூறு கிறிஸ்துவர்களையும் மூன்றாவது கூறு மதச்சார்பின்மை பேசுபவர்களையும் குத்தும்” என்ற பிரவீண் தொகாடியாவின் (விஸ்வ ஹிந்து பரிஷத்) பேச்சை அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியாது. அது வெறும் பேச்சல்ல, எதிர்காலத்தில் நடக்க இருக்கும் தாக்குதல்களுக்கான முன்னெச்சரிக்கை என்பது சமீபத்திய சம்பவங்களால் நிரூபணமாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னணியில் இந்துத் தீவிரவாத அமைப்புகள் இருக்கின்றன என்பதற்கு சாட்சியங்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. அதில் முக்கியமானவர், பிரக்யாசிங் தாகூர் என்ற பெண்துறவி. குண்டுவெடிப்புக்கும் சாத்வீகமான இந்தத் துறவிக்கும் இருக்கும் நெருக்கம் பற்றிய ஆதாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவானதை அடுத்து, அக்டோபர் 23, 2008 அன்று இந்தூரில் வைத்துக் கைது செய்யப்பட்டார் பிரக்யாசிங் தாகூர். கைது செய்தது, மகாராஷ்டிர மாநில தீவிரவாதத் தடுப்புக் காவல்படை.

இந்தக் கைதின் ஆரம்பப்புள்ளி, கடந்த செப்டெம்பர் 29 அன்று மகாராஷ்டிர மாநிலம் மாலேகானிலும் குஜராத் மாநிலம் மொடாஸாவிலும் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இருந்துதான் தொடங்கியது. விசாரணைப் படலம் ஆரம்பித்தது. சமீபகாலமாக நடக்கும் குண்டுவெடிப்புகளில் இருசக்கர வாகனங்களே அதிகம் பயன்படுத்தப்படுவது மகாராஷ்டிர காவல்துறையினரை உறுத்திக்கொண்டே இருந்தது. அந்தக் கோணத்திலேயே விசாரணையைத் தொடர்ந்தனர்.

மாலேகான் சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் நதிமூல, ரிஷிமூலங்களைத் தோண்டிப் பார்த்தபோது, பிரக்யாசிங் தாகூருக்குச் சொந்தமான வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் இந்தக் குண்டுவெடிப்புக்கும் சங்கப் பரிவார அமைப்பினருக்கும்  தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவ்வளவுதான். வியர்த்து விறுவிறுத்துவிட்டது காவல்துறையினருக்கு.  உடனடியாக பிரக்யாசிங் தாகூர் மற்றும் சிவநாராயண சிங், ஷாம்லால் பவார் சாஹு ஆகியோரைக் கைது செய்தது மகாராஷ்டிர காவல்துறை. விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.

யார் இந்த பிரக்யாசிங் தாகூர்?

மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சி.பி. சிங் தாகூர். தீவிர ஆர்.எஸ்.எஸ். காரர். ஆயுர்வேத மருத்துவரும்கூட. இவருடைய மகள் பிரக்யாசிங் தாகூர். ம.பி.யைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் பிறகு குஜராத்துக்குக் குடிபெயர்ந்துவிட்டது தாகூரின் குடும்பம். ரத்தம், நாடி, நரம்பு எல்லாவற்றிலுமே இந்துயிசம் என்பது புரையோடிப் போயிருந்தது பிரக்யாசிங்குக்கு. விளைவு, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., அகில பாரத வித்யார்த்தி பரிஷத் போன்ற இந்து அமைப்புகளின் மீதும் அவற்றின் நடவடிக்கைகள் மீதும் இயற்கையாகவே ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது பிரக்யாசிங்குக்கு.

1997-ல் ஏ.பி.வி.பி.யின் மகளிர் அணியில் தன்னை இணைத்துக்கொண்டார். பிறகு வி.ஹெச்.பி.யின் துர்காவாஹினி அழைப்பு விடுக்கவே, அங்கு சிலகாலம் தன்னுடைய சேவையைத் தொடர்ந்தார். சேவை என்றால் பேச்சு. பேச்சு. வார்த்தைக்கு வார்த்தை இந்து வாடை அடிக்கும் அளவுக்கு. வசீகரிக்கும் பேச்சாற்றல் கொண்ட அவருடைய பேச்சு இந்துத் தலைவர்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. அதன்பிறகு ராஷ்ட்ரிய ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பைப் பிரத்யேகமாகத்  தொடங்கினார். இந்த அமைப்பின் சார்பாக பல பொதுக்கூட்டங்களும் சொற்பொழிவுகளும் நடத்தப்பட்டன. எல்லாவற்றிலும் அம்மணியின் பிரசங்கங்கள்தான் பிரதானமாக இடம்பெறும்.

இதற்கிடையே 2002-ல் `ஜெய் வந்தே மாதரம் ஜன் கல்யாண் சமிதி’ என்ற அமைப்பைத் தொடங்கினார். இதற்கு நேசக்கரம் நீட்டியது குஜராத் அரசு.  இந்த பிரக்யாசிங் தாகூருக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது. சாத்வி பூர்ணா சேத்தானந்த் கிரி. நிற்க.

சாத்வி பிரக்யாசிங் தாகூருக்கும் அவருடைய ஆதரவாளருக்கும் இடையே நடைபெற்ற சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலை மகாராஷ்டிர காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.  அந்த உரையாடலில் இருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம்.

சாத்வி: என்னை (போலீசார்) இன்று மாலை கைது செய்யப் போகிறார்கள்.

ராம்நாராயணன்: ஏன்?

சாத்வி: மாலேகான் நகரில் குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட என்னுடைய மோட்டார் சைக்கிளை அவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.

ராம்நாராயணன்: பைக்கை நீங்கள்தான் விற்றுவிட்டீர்களே..

சாத்வி: எங்கே விற்றதாகச் சொல்வது.. மத்திய பிரதேசம், குஜராத் அல்லது மகாராஷ்டிரம்..?

ராம்நாராயணன்: குஜராத் என்று சொல்லுங்கள்.

சாத்வி: எப்போது விற்றேன் என்று கேட்டால் என்ன சொல்ல?

ராம்நாராயணன்: ஞாபகம் இல்லை என்று சொல்லி விடுங்கள்.

சாத்வி: அந்தக் குண்டுவெடிப்பில் ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர்? அதை நீ எங்கே பார்க் செய்தாய்.. ஆட்கள் நிறைய இருந்த இடத்தில் நிறுத்த வேண்டியது தானே?

ராம்நாராயணன்: நிறையப் பேர் இருந்த இடத்தில்தான் நிறுத்த முயன்றேன். ஆனால், சரியான இடம் கிடைக்கவில்லை. கடைசியாக நான் நிறுத்திய இடத்தில் நிறையப் பேர் இல்லை. சரி.. நிலைமை மோசமானால் அதை நாம் சந்திப்போம்…

– இந்த ஆதாரத்தையடுத்து சாத்வியை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்துத் துறவி ஒருவர் குண்டுவெடிப்பு வழக்கில் கையும் களவுமாகப் பிடிபட்டது சங்கப் பரிவாரங்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஆனாலும் `இது பொய்வழக்கு. இந்துக்களை அவமானப்படுத்த நடத்தப்படும் நாடகம்’ என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். என்ன சொல்லி இந்தப் பிரச்னையைத் திசைதிருப்பலாம் என்று காத்துக்கொண்டிருந்தது பா.ஜ.க. விசாரணையின்போது தன்னைக் கொடுமைப்படுத்துவதாக பிரக்யாசிங் பேட்டியளித்து வைக்க, தற்போது ஆகாயத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கியிருக்கிறது பாரதிய ஜனதா.

“பெண் துறவியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நோகடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் அரசு பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறது. விசாரணை நேர்மையுடன் நடத்தப்படவில்லை” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் பா.ஜ.க. தலைவர் அத்வானி.

இதனையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை அனுப்பி அத்வானியிடம் விளக்கம் கொடுக்க வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது பெண் துறவியின் வாக்குமூலங்களை பிரதமர் தனிப்பட்ட முறையில் படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தற்போது இந்தக் குண்டுவெடிப்பு விவகாரம் இன்னொரு திசையிலும் நகரத் தொடங்கியிருக்கிறது. இந்துத் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக  முன்னாள் ராணுவ அதிகாரி புரோகித் என்பவரின் உதவியை நாடியிருக்கின்றன இந்து அமைப்புகள் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சுதாகர் திவிவேதி என்பவர் மாலேகான் குண்டுவெடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கியக் குற்றவாளி. குண்டுவெடிப்புகளுக்கு முன்னர் அதில் ஈடுபட்ட நபர்களுக்கு இடையே ஃபரீதாபாத், டெல்லி, போபால், பூனே உள்ளிட்ட இடங்களில் பல சந்திப்புகளை ஏற்படுத்தி அவர்களை ஒருங்கிணைத்தவர் இவர் என்பது காவல்துறையினரின் குற்றச்சாட்டு. முக்கியமாக, தாக்குதல்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டியது, ராணுவ உயரதிகாரிகளைக் கொண்டு ஆர்.டி.எக்ஸ். உள்ளிட்ட வெடிபொருள்களை வாங்கியது ஆகியன இவருடைய பணிகள் என்பது மகாராஷ்டிர காவல்துறை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்.

இவருடைய சொந்த ஊர் கான்பூர். சுவாமி அமிர்தானந்தா என்பது சுயமாக சூட்டிக்கொண்ட பெயர். ஜம்முவைச் சேர்ந்த `ஷார்தா சர்வாக்ய பீடம்’ என்ற இந்து மத நிறுவனத்தின் நிர்வாகியான இவருக்கு, போலியான அடையாள அட்டைகளை வாங்கிக் கொடுத்ததோடு, ரிவால்வர் வைத்துக்கொள்வதற்கான உரிமையையும் முறைகேடான முறையில் வாங்கிக் கொடுத்துள்ளார் புரோகித் என்று கூறுகிறது மகாராஷ்டிர காவல்துறை. மேலும், இந்த இந்து அமைப்புகள் நடத்தும்  ஆயுதப் பயிற்சிகளுக்குத் தேவையான வெடிபொருள்கள் மற்றும் ஆயுதங்களை தன்னுடைய கோட்டாவின் மூலம் வாங்கியதோடு, தனக்கு நெருக்கமான உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் பதுக்கி வைத்திருந்ததும் அம்பலமாகியுள்ளது.

புரோகித் பயன்படுத்திய லேப்டாப் இன்னமும் போலீஸாரின் கையில் சிக்கவில்லை.  ஒருவேளை, அது கிடைத்தால் சுவாமி அமிர்தானந்தா, பிரக்யாசிங் உள்ளிட்ட இந்து  சாதுக்கள் மற்றும் சாத்விக்களின் நிஜமுகங்கள் அம்பலமாவதோடு, பல முக்கியத் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது மகாராஷ்டிர காவல்துறை. விஷயம் மேலும் மேலும் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது!

  • நாட்காட்டி

    May 2024
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • பதிவேடு

  • Blog Stats

    • 77,158 hits