ஈழம்:சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம் – கலைஞர்

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் நா‌ம் எடு‌க்க வே‌ண்டிய நடவடி‌க்கைக‌ள் ப‌ற்‌றி முடிவு செ‌ய்ய நாளை ச‌ட்டம‌ன்ற க‌ட்‌‌சி‌த் தலைவ‌ர்க‌ள் கூ‌ட்ட‌ம் எனது தலைமை‌யி‌ல் செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் நடைபெறு‌கிறது” எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

செ‌ன்‌னை தலைமை‌ச் செயலக‌த்த‌ி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் நாளுக்கு நாள் இலங்கையில் வாழும் தமிழர்கள் உயிர் உடமைகளை இழந்து வாழ்வதற்கே பயந்து பாதிக்கப்படும் நிலையில் மேலும் மேலும் நம் சிந்தை கலக்கும் செய்திகள் வந்து கொண்டிருப்பதால் அது பற்றி மத்திய அரசுடன் தொடர்பு கொள்ளவும், மேற்கொண்டு நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்யவும், சட்டமன்றத்தில் இடம் பெற்று உள்ள கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நாளை (25ஆ‌ம் தேதி) காலை 10 மணிக்கு தலைமை‌ச் செயலகத்தில் எனது அறையில் நடைபெறவிருக்கிறது எ‌ன்று கூ‌றினா‌ர்.

கட்சியின் தலைவர், பொதுச் செயலர், மாநில செயலர் என்ற முறையில் ஒருவரும், சட்டமன்ற கட்சி தலைவர் ஒருவருமாக 2 பேர் கலந்து கொண்டு தக்க ஆலோசனைகளை கூற வே‌ண்டு‌மெ‌ன்று இ‌ன்று கடிதம் எழுதியிருக்கிறேன் எ‌ன்று கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இந்த அவசர கூட்டம் பா.ம.க. நிறுவனர் ராமதாசும், நானும் கலந்து பேசி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த கருணா‌நி‌தி, இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராகவும், கட்சி தலைவராகவும் கோ.க.மணி இருந்த போதிலும், நிறுவனத் தலைவர் என்ற முறையில் ராமதாஸ் கலந்து கொள்வார் எ‌ன்றா‌ர்.

அதைப் போலவே ம.தி.மு.க. என்றால் சட்டமன்ற கட்சி தலைவராக மு.கண்ணப்பன் இருக்கிறார். அவரும் கலந்து கொள்ளலாம், அந்த கட்சியின் பொதுச்செயலரான வைகோவும் கலந்து கொள்ளலாம் எ‌ன்று கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கலைஞரின் குறுக்கு விசாரணைக்கு பதில் சொல்ல ஜெயலலிதா தயாரா?

கோர்ட்டுக்கு நேரடியாக வந்து குறுக்கு விசாரணைக்கு பதிலளிக்க தயாரா? என்று ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.

பதில் நோட்டீஸ்

சட்டக் கல்லூரி மாணவர் மோதல் தொடர்பாக கோவையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கருத்து கூறி இருந்தார். அது தனது நன்மதிப்பை கெடுத்ததால், இதற்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவதூறு வழக்கு தொடர இருப்பதாகவும் கருணாநிதிக்கு ஜெயலலிதா சார்பில் அ.தி.மு.க. வக்கீல் நவநீதகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்து கருணாநிதியின் சார்பில் நவநீதகிருஷ்ணனுக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன் அனுப்பிய பதில் நோட்டீஸ் வருமாறு:-

பொறுப்புள்ள குடிமகன்

ஜெயலலிதாவுக்காக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நீங்கள் அனுப்பிய நோட்டீஸ் கிடைத்தது. அதில் கூறப்பட்டு உள்ள கருத்துகள் அனைத்தையும் அவர் மறுக்கிறார். நோட்டீசில் கூறியவற்றை சட்டத்தின் அடிப்படையில் ஜெயலலிதா நிரூபிக்க வேண்டும். உண்மையிலேயே ஜெயலலிதா ஒரு பொறுப்புள்ள பிரஜையாக இருந்தால், முதல்-அமைச்சர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று அவர் கேட்டிருக்க மாட்டார்.

மாறாக, அந்த மோதலுக்கான காரணத்தை அறிந்து, அங்குள்ள மாணவர்களின் மனதில் உள்ள சாதிய எண்ணங்களை களைய ஜெயலலிதா முன்வந்திருப்பார். சாதி ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் பற்றி மாணவர்களிடம் கூறி இருப்பார். அதை விட்டுவிட்டு, கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுவது, அவர் பொறுப்புள்ளவர் என்பதைக் காட்டாது.

பதவி விலகல் – தொடர்ச்சியான பாராயணம்

முதல்-அமைச்சராக கருணாநிதி பதவி ஏற்றதில் இருந்தே, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா அடிக்கடி கேட்டு வருகிறார். தினமும், கருணாநிதி அல்லது பிரதமர் அல்லது வேறு யாரையாவது பதவி விலக வேண்டும் என்று கேட்பது ஜெயலலிதாவுக்கு வழக்கமாக உள்ளது.

ஜெயலலிதாவைவிட புகழ் பெற்ற மற்றும் நல்ல தன்மையுள்ள கருணாநிதியை ராஜினாமா செய்யக் கூறுவது, ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் அவருக்கு அழகல்ல.

நீங்கள் கூறி இருக்கும் கருத்தைப் பார்க்கும் போது, ஒருவரை ராஜினாமா செய்யக் கோருவதுதான் ஒரு குடிமகனின் பொறுப்பு என்றே ஜெயலலிதா கருதுகிறார் போலும். அதிக குளிரூட்டப்பட்ட அறையிலோ அல்லது உயர்ந்த மலைப் பகுதிகளிலோ ஜெயலலிதா இருந்து கொண்டு, அவரது கட்சியின் அப்பாவித் தொண்டர்களையோ அல்லது வாடகைக்கு அமர்த்தப் பட்டவர்களையோ வைத்து தெருக்களில் கத்த வேண்டாம். அதையே பெரிய பொறுப்பு என்று நினைத்து திருப்தி அடைய வேண்டாம்.

எது அதிர்ச்சி அளித்தது?

முதலில், இந்தியக் குடிமகனின் கடமை, பொறுப்பு பற்றி ஜெயலலிதா தெரிந்து கொள்ளட்டும். அரசியல் அமைப்பில் கூறப்பட்டு இருக்கும் பொறுப்புகள் பற்றி முதலில் அவர் நன்றாக படிக்கட்டும். தற்போது ஜெயலலிதா மற்றவர்களிடம் அறத்தைப் பற்றி போதிக்கிறார்.

கல்லூரியில் நடந்த மோதல் பற்றி ஜெயலலிதா கூறும் போது, `அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்’ என்று குறிப்பிட்டார். ஆனால் தர்மபுரி அருகே 3 வேளாண் கல்லூரி மாணவிகள், அவரது கட்சியினரால் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தை, அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம் என்று குறிப்பிடவே இல்லையே.

குற்றவாளிகள், அன்னியச் செலவாணி மோசடி செய்கிறவர்களிடம் ஏன் ஜெயலலிதா நெருக்கமான உறவு வைத்துள்ளவராகக் காணப்படுகிறார் என்பதை அவர் விளக்கட்டும்.

மனசாட்சி விழிக்கவில்லையா?

2001-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட தகுதி இழப்பு செய்யப்பட்ட பிறகும், அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்ட கொள்கைகளை மீறி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இதை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன கோர்ட்டு நீதிபதிகள் கண்டித்து உங்களை பதவி விலகக் கூறினர்.

இப்படிப்பட்ட ஒரு நிலையை அடைந்த முதல் இந்தியப் பிரஜை ஜெயலலிதாதான். அவருக்கு இருக்கும் மனசாட்சி மற்றும் தார்மீகப் பொறுப்புகள் அனைத்துமே சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது `டாட்டா’ காட்டிச் சென்றுவிடும்.

அவரது கட்சியைச் சேர்ந்த மதுராந்தகம், தூத்துக்குடி, ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்ட போது, அதை அதிர்ச்சியான சம்பவம் என்று கூறவில்லையே.

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி முகத்தில் ஆசிட் வீசப்பட்ட போதும் அதற்கும் அதிர்ச்சி அடையவில்லையே. அப்போது இருந்த முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று அவரது மனச்சாட்சி கேட்கவில்லையே. அப்போது முதல்-அமைச்சராக இருந்தவர் யார் என்பது அவருக்குத் தெரியும்.

வெள்ள நிவாரணம் வழங்கும் போது மக்கள் பலர் நெரிசலில் சிக்கி இறந்த போதும் அவரது மனச்சாட்சி விழித்துக் கொள்ளவில்லையே.

ஆடிட்டர் ராஜசேகரன்

காபிபோசா சட்டத்தின் அடிப்படையில் ஜெயலலிதாவின் உறவினர்கள் கைது செய்யப்பட்ட போது அவரது மனச்சாட்சி செயல்படவே இல்லையே. அதுபோல் அப்போது அவரது தார்மீகப் பொறுப்பும் செயல்படாமல் போய்விட்டதே. காலசூழல் மாறுவதற்கு ஏற்பவும் அதிகாரம் கிடைப்பதற்கு ஏற்பவும் அவரது தார்மீகப் பொறுப்பும் மாறுகிறது.

நீண்டகால நண்பரும் அவரது ஆடிட்டருமான ராஜசேகரன் திடகாத்திரமாக போயஸ் தோட்ட வீட்டுக்குள் சென்று விட்டு, வெளியே வரும் போது கடுமையான காயமடைந்தவராக வந்தாரே, அதன் காரணத்தை இன்னும் ஜெயலலிதா விளக்கவில்லையே ஏன்? அவர் அங்கு ரத்தம் சிந்தியது, ஜெயலலிதாவுக்கு விளையாட்டாகவும், கேளிக்கையாகவும் இருந்ததோ?

உள்நோக்கம் இல்லை

ஜெயலலிதாவுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு கருணாநிதிக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அப்படிப்பட்ட நோக்கம் உள்ளவராக இருந்திருந்தால், ஜெயலலிதா கட்சி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் வெளியேற்றிய போது, அவர்களை மீண்டும் அவைக்குள் அழைக்க தனது அமைச்சர்களை கருணாநிதி அனுப்பி இருக்க மாட்டார். அவைக்கு வர அவர்களுக்கு விருப்பம் இருந்தாலும், ஜெயலலிதாவுக்கு பயந்து வராமல் போய்விட்டார்கள். ஜெயலலிதாவின் ஒப்புதல் பெற்றாவது அவைக்கு வரும்படி கருணாநிதி கேட்டுக் கொண்டார்.

வயதான முதிர்ச்சி அடைந்த அரசியல்வாதி என்ற வகையில், எதிர்க்கட்சியினருக்கும் கருணாநிதி நேசக்கரம் நீட்டுகிறார். அப்படி இருந்தும் மின்வெட்டு பிரச்சினையில் பேசுவதற்கு ஜெயலலிதாவின் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வரவில்லை. இதன்மூலம் தன் பொறுப்பை தட்டிக் கழித்து, தன்னை தேர்ந்து எடுத்து அனுப்பிய மக்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.

வைரம் படத்தில்

மதிப்பு, பெருமை, மரியாதை, நன்மதிப்பு போன்றவை பற்றி ஜெயலலிதா தனது நோட்டீசில் குறிப்பிட்டு இருக்கிறார். அவரது கட்சியின் அவைத் தலைவராக இருந்த நாவலர் நெடுஞ்செழியனை `உதிர்ந்த மயிர்’ என்று விமர்சித்த போதும், ஜெயலலிதாவின் மதிப்பு பற்றி மக்கள் அறிந்து கொண்டனர்.

3-வது அணியில் இருந்து கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜெயலலிதா செயல்பட்ட விதத்தைக் கண்டு, அவரது நன்மதிப்பை மக்கள் தெரிந்து கொண்டனர்.

கோடநாடு எஸ்டேட் விவகாரத்திலும் மக்கள் அவரது பெருமைகளை நன்றாகத் தெரிந்து வைத்துள்ளனர்.

கோர்ட்டில் தனது கையெழுத்தை தன்னுடையது அல்ல என்று மறுத்தவர் ஜெயலலிதா.

சென்னை ஐகோர்ட்டு முதல் பெஞ்ச் மற்றும் விசாரணைக் கமிஷன் முன்பு வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கும் போது கூட, உண்ணாவிரதம் இருந்து அதற்கு தேவையற்ற விளம்பரத்தை தேட முற்பட்டவர் அவர். அதிலிருந்தே சட்டத்தை அவர் எப்படி மதிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்

சட்டத்தை மதிப்பவர் என்று கூறி அவர் அனுப்பிய நோட்டீசை படித்து கருணாநிதி அதிர்ச்சி அடைந்தார். சட்டங்களை எப்படி அவர் மதிக்கிறார் என்பதை,

வருமான வரிக் கணக்கு, சொத்து வரிக் கணக்கு ஆகியவற்றை தாக்கல் செய்யாமல் இருந்தும், அரசுச் சொத்தை வாங்கியதில் இருந்துமே தெரிந்து கொள்ளலாம்.

வன்முறையை எப்போதும் எதிர்ப்பவர் என்று தன்னை ஜெயலலிதா கூறிக் கொள்கிறார். பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு தீர்ப்பின் போது அதை கடைபிடித்து இருந்தால், 3 உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்குமே.

பள்ளிக்கான அனுமதியை புதுப்பிக்கும் விவகாரத்தில் விதிமுறைகளை கடைபிடித்து இருந்தால், கும்பகோணத்தில் டசன் டசனாக குழந்தைகளை நாம் சாகக் கொடுத்து இருக்க மாட்டோமே.

ஜெயலலிதாவும் அவரது தோழியும் பொது இடமான மகாமக குளத்தில் குளிப்பதை தவிர்த்து இருந்தால் எத்தனையோ உயிர்கள் பிழைத்து இருக்குமே.

இவர் சாலையில் பயணிக்கும் போது, நூற்றுக் கணக்கில் வாகனங்களும் மக்களும் மணிக்கணக்கில் காத்திருக்க வைக்கப்பட்டார்களே. ரெயிலில் ஜெயலலிதா சென்றார் என்ற செய்தியை மக்கள் கேட்டதே இல்லையே.

இரக்கமில்லாமல்

டெஸ்மா சட்டத்தைக் கொண்டு வந்து இரக்கமில்லாமல் ஒரு லட்சத்து 70 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்தது யார்?

இந்த பின்னணிகளை வைத்துக் கொண்டு அவர் வேதம் ஓதுகிறார். பொதுநலன், பொதுமக்கள், வன்முறை, சட்டம் பற்றி அவர் பேசாமல் இருப்பது நல்லது.

தனக்கு மன வேதனை ஏற்பட்டு உள்ளதாக நோட்டீசில் ஜெயலலிதா கூறி இருக்கிறார். அரசியல் களத்தில் அவருக்கு தொடர்ந்து ஏற்பட்ட தோல்வியால் கூட இருக்கலாம். தனக்கும், தனது கட்சியின் சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறும் அவர்தான் அவை இருக்கிறதா என்பதை நிரூபித்துக் கொள்ள வேண்டும்.

தனது கட்சித் தலைவர்களையே ஜெயலலிதா சந்திப்பதில்லை. அவரது செயல்பாடு எல்லோருக்கும் தெரியும். கூட்டணிக் கட்சியினரும் அவரை சந்திக்க முடியாது. எனவே, கருணாநிதியின் கருத்து பற்றி தனது கட்சியினர் போன் செய்து தன்னிடம் பேசி, விசாரித்தனர் என்று ஜெயலலிதா கூறுவதை ஏற்க முடியாது.

இதுவா தேசபக்தி?

சட்டம் ஒழுங்கு பற்றி கூட ஜெயலலிதா குறிப்பிட்டு இருக்கிறார். அவரது காலத்தில் கோர்ட்டு அளித்த தீர்ப்புகளில் சட்டம் ஒழுங்கு பற்றி என்ன கருத்துகள் கூறப்பட்டன என்பதைப் பார்க்க முடியும்.

அவர் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் மாணவர் போராட்டம், மோதல்கள், சாதிச் சண்டைகள், பட்டப் பகலில் கொலை, எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு போன்றவை தினசரி சம்பவங்களே. பத்திரிகை சுதந்திரமும் கேள்விக்குறியாகவே இருந்தது.

3 லட்சம் அமெரிக்க டாலர்களை வாங்கியதில் இருந்து அவரது தேச பக்தியை தெரிந்து கொள்ளலாம். இதை அனுப்பியவர்களின் பெயர், முகவரி தெரியாதாம். தற்போது மானநஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் கேட்கிறார்.

ஜெயலலிதா கோடியில் புரளுகிறவர் என்பது கருணாநிதிக்குத் தெரியும். பங்களா, மிகவும் உயர்ந்த ஓட்டல்களில் தங்கும் வழக்கத்தைக் கொண்டவர் அவர். இதனால் மட்டும் மரியாதை ஒட்டிக் கொண்டு இருப்பதாக நினைத்து விடக்கூடாது.

குறுக்கு விசாரணைக்கு தயாரா?

ஜெயலலிதா கூறிய ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 19-ந் தேதி முரசொலியில் கருணாநிதி எழுதிய கடிதமே பதிலாக எடுத்துக் கொள்ளுங்கள். கையெழுத்து போடாமல் நோட்டீஸ் அனுப்பியதே சட்டப்படி தவறு. விளம்பரத்துக்காக இப்படி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

உண்மையிலேயே அவர் சட்டத்தை மதிப்பவராக இருந்தால், வக்கீல் வைக்காமல், யார் மூலமாவது நிழல் யுத்தம் நடத்தாமல் அவரே கோர்ட்டுக்கு நேரடியாக வர வேண்டும். நன்மதிப்பு, அவதூறு தொடர்பாக அங்கு கருணாநிதி மேற்கொள்ளும் குறுக்கு விசாரணைக்கு அவர் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

“டோண்டு” சாருக்கு கலைஞரின் விளையாட்டின் மீதான திடீர் அக்கறை!

அது சின்னக்கவுண்டர் என்ற திரைப்படம்னு நெனைக்கிறேன்……! எந்நேரமும் தேவையில்லாத ஆராய்ச்சி பண்ணிக்கொண்டே இருப்பார் திரு.செந்தில் , கவுண்டமணி அதைக்கிண்டலடிப்பார் கவுண்டமணி….

அத்தகைய செந்தில் சாரின் தேவையற்ற ஆராய்ச்சி போலவே இருக்கிறது ஜூவியின் ல்லுல்லாயி ஆராய்ச்சியும் அதையொட்டிய டோண்டூ சாரின் பதிவும்….!!

கிண்டலாகச் சொன்னேன் என்று பெருந்தன்மையுடன் சொன்ன பிறகும் அதற்காக மான நஷ்ட வழக்குப்போடும் ஜெயல்லிதாவைக் கண்டிக்க துப்பில்லாதவர் அவர் என்றே நாம் கருதுகிறோம்…

மேம்பால ஊழல் வழக்கென்று கலைஞரை நள்ளிரவில் கைது செய்தாரே , இன்று அந்த வழக்கில் எந்த மூகாந்திரமும் இல்லை , குற்றமும் நிரூபிக்கப்படவில்லை…!!! அதற்காக ஜெயல்லிதா மன்னிப்புக் கேட்டாரா ? அதைக் கண்டிக்க நினைத்தாரோ டோண்டு சார்…? இல்லை இதே போன்ற ஒரு நையாண்டிப்பதிவையாவது பதிந்தாரா?

டோண்டு சாரை பல காலமாக பதிவுகளின் அறிந்தவன் என்ற முறையில் , நானும் மற்ற நண்பர்களும் அவரை “சோ”வின் பிரச்சார பீரங்கி என்பதனையும் , துக்ளக்கின் வலைப்பதிவு முகம்தான் அவரது இணையப்பக்கம் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது..!!!!!

ஆகவே , துக்ளக்கிற்குள்ள வாசகர் வட்டமும் , டோண்டு சாரின் வலைப்பதிவு வாசகர் வட்டமும் சற்றேறக்குறைய ஒரே மாதிரியான கருத்தோட்டம் கொண்டவர்கள் என்பது தான் உண்மை…

தான் எழுதுவதே மக்களின் கருத்தாக இருக்க வேண்டும் , மாற்றுக்கருத்துக் கொண்டவர்களெல்லாம் முட்டாள்கள் என்பதை சோ அவர்கள் என்றுமே தன்னுடைய அடிமனதில் நினைத்துக்கொண்டுதான் இருக்கிறார்…..அதைத்தான் காட்டுகின்றன , சமீபத்திய வட இந்தியப்பத்திரிகைக்களிடம் அளிக்கும் பேட்டி.  தனது கருத்தையே தமிழக மக்களின் கருத்தாக திரித்துக் கூறுவதில் ஏற்படும் அற்ப சந்தோசம் அவருக்கு…

அதே போலவே , ஜூவியின் இந்த நையாண்டியை எடுத்து தனது வாசகர்களுக்கு கொடுத்து மகிழ்ந்து போவதில் அற்ப சந்தோஷம் திரு.டோண்டு சாருக்கு..!!!!

ஆனால் , இவ்வாறு கலைஞரை விமர்சிக்கும் பலரும் ஒருதரம் கூட மறந்தும் ஜெஜெவையோ , சோவையோ , ராம் ஐயோ , சுப்ரமன்யம் சுவாமியையோ விமர்சிப்பது கிடையாது…

நாமாவது வெளிப்படையாக நமது நிலையை அறிவித்து விட்டு வாதம் செய்கிறோம்….

ஆனால் , இவர்கள்???????

வளரட்டும் உங்கள் பணி ,

வளரட்டும் கலைஞரின் விளையாட்டு மீதான அக்கறை !!!!

தமிழக அரசை தர்மசங்கடப்படுத்தாதீர்கள் – கலைஞர்

சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினையில், சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட்டு சிலர் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தனித்து என்னால் எதுவும் செய்ய முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் நடைபெறும் தமிழ் இனப் படுகொலை, நாற்பது ஆண்டுக் கால வரலாற்றுக்குரிய தொடர் நிகழ்ச்சியாகி விட்டது.

அதைத் தடுத்து நிறுத்தித் தமிழர்க்கு உரிமை பெற்றுத் தர போர்க்கோலம் பூண்டவர்கள், பகைவர்கள் மீது பாய்ந்திடாமல்; சகோதர யுத்தம் நடத்துவதிலேயும் அவற்றில் மாண்டு மடியும் தமது பழைய களத் தளபதிகளுக்கு சமாதிகள் அமைத்திடும் பணியிலேயும் காட்டிய விறுவிறுப்பை இன ஒற்றுமையில் காட்டத் தேவையில்லையென்றே கருதிச் செயல்பட்டு;

தமது இனம் அறவே செத்து மடிவது குறித்து அக்கறையற்றே இருந்து விட்டனர்.

அதிர்ச்சி தரத் தக்கதும் ஆறாத் துயரம் அடையத் தக்கதுமான நிகழ்வுகள் இலங்கை மண்ணில் நித்தியத் ‘திருவிழா’க்கள் ஆகி; இறுதிக் கட்டமாக அமைந்துள்ள இன்றுள்ள சோக நிலை, உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்ததே.

இன்றைய நிலைக்கு முடிவு கண்டிட எடுத்திடும் முயற்சி என் ஒருவனால் மட்டுமே முற்றுப் பெறக் கூடியதல்ல!. இதை உணர்ந்திருப்போர் கூட நான் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருப்பதால் என்னால் தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்று தவறாக எண்ணுகிறார்கள்; அல்லது தவறாகக் கூறுகிறார்கள்.

“இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு, ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக எதுவும் பேசுவோம், எங்களுக்கு வேண்டியது இலங்கையில் தமிழ் ஈழம் தான்” என்கிற அவர்களின் பேச்சும், எழுத்தும் எனக்குப் புரிகிறது.

ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கிடையே அலை மோதும் எதிர் விமர்சனங்களையும் ஓர் அரசு; சிந்தித்துச் செயல்பட வேண்டியிருக்கிறதல்லவா? அவற்றை அலட்சியப்படுத்த முடியாதல்லவா? முதலில் அத்தகைய சட்டக் கட்டுப்பாடுகளை உடைக்கும் விதமாகப் பேசுகிறார்கள்.

சட்டரீதியாக அதன் மீது நடவடிக்கை எடுத்திட நேர்ந்தால், ‘கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக் கெதிராக நடந்து கொள்கிறார்’ என்று என் மீது ‘பெரும் பழி’ சுமத்துகிறார்கள். சாதனைகள் புரியும் ஆட்சி என்பதற்குச் சான்றாக அமைந்துள்ள அடுக்கடுக்கான திட்டங்களும், அவற்றின் செயல்பாடுகளும் அவை தொடர்பான புள்ளி விபரங்களுமே போதுமானவை என்ற மன நிறைவு எனக்கிருந்தாலும்;

எனக்கும், என் தலைமையில் உள்ள ஆட்சிக்கும் எப்படியோ ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று தீர்மானித்து; எவையெவை சட்ட விரோதமான செயல்களோ; அவற்றிலே ஈடுபட்டு தமிழக அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் தந்திரத்தைக் கையாண்டு வருகிறார்கள்.

இந்தப் பிரச்சனையில் சுதந்திரமாக செயல்பட வருக என்று என்னைக் காட்டிலும் வீரமிக்க தமிழர்களை அழைப்பதோடு நான் ஒதுங்கி நின்று விடாமல்; அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் உறுதி கூறி என்னுடனிருந்து துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

இந்திய அரசு என் வேண்டுகோளையும், அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தின் தீர்மானங்களையும் படிப்படியாக நிறைவேற்ற முனைந்ததற்கு சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கும்,

இலங்கை தமிழர்களுக்கு மருந்து, உணவு, உடை ஆகியவற்றை செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. மன்றம் ஆகியவற்றின் மூலம் வழங்க இதுவரை 8 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கிய தமிழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் வழங்கிட வேண்டுகிறேன்.

நான் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கள்; இலங்கை தமிழர்களின் காயத்திற்கும், இங்குள்ள சில தலைவர்களின் எரிச்சலுக்கும் தக்க சிகிச்சைக்கான மருந்தாகட்டும்.

அவர்களின் நலிவு தீர்த்திட ஒரு வகையில் நாம் பயன்படுகிறோம் என்கிற மன நிறைவுடன் என்றும் போல் தமிழ்த் தொண்டு, தமிழினத் தொண்டு தொடர்வோம் என்று கூறியுள்ளார்.

நாம் ஒன்றுபட்டு ஐக்கியமாகக் குரல் கொடுத்தால் போரை நிறுத்த இந்திய அரசு ஆணை பிறப்பிக்காதா? – வீரமணி

நாம் ஒன்றுபட்டு ஐக்கியமாகக் குரல் கொடுத்தால் போரை நிறுத்த இந்திய அரசு ஆணை பிறப்பிக்காதா? – வீரமணி
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2008, 05:38.23 AM GMT +05:30 ]
தமிழர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவேண்டிய நேரத்தில் தமிழக அரசின்மீது தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அவரது அறிக்கை வருமாறு:
ஈழத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி, உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடமின்றி காடுகள், வனாந்தரங்களில் உறையும் நிலைக்கு – பிறந்த மண்ணிலேயே அவதியுறும் ஈவிரக்கம் அற்ற ஒரு நிலையில், தமிழ் இன உணர்வோடும், மனிதநேயத்தோடும் உதவிட நிதி, நிவாரணப் பொருள்கள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வின் வெளிப்பாடாக உலகத்திற்குக் காட்ட நிதி திரட்டி பொருள்களை அங்கே அனுப்பும் நிலை முதல்வர் கலைஞர் அவர்களின் முயற்சியால் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இப்பொருள்கள் விடுதலைப் புலிகளுக்கே பயன்படும் என்ற விதண்டாவாத விஷமப் பிரச்சாரம், சிங்களவர்களுக்கே பயன்படும் என்ற குற்றச்சாட்டுகளைக் கூறி அறிக்கைவிடும் அவசர, ஆத்திர அரசியல் அரைவேக்காடுகளுக்கு, மண்டையில் அடிப்பதுபோல முதல்வர் கலைஞருக்கு அவர் கேட்டுக்கொண்டபடி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெளிவாகக் கடிதம் எழுதியுள்ளாரே!

1. உதவிடும் இப்பொருள்கள் இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவரகத்திற்குக் கப்பலில் அனுப்பப்படும்.

2. பிறகு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) மூலமும் ஐ.நா. சபையின் பார்வையாளர்கள் மூலமும், பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு – (மூன்று இலட்சத்திற்குமேல்) சொந்த நாட்டில் சோற்றுக்கும் வழியற்ற நிலையில் உள்ள மக்களுக்குக் கிடைக்கச் செய்யப்படும். வேண்டுமென்றே உணவை சிவிலியன் மக்களுக்கு எதிரான ஓர் ஆயுதமாகக் கொண்டு, இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசின் திட்டத்தினை செயல்பட விடாத ஒரு சிறந்த ஏற்பாடு இது அல்லவா?

போர் நிறுத்தம் – அமைதி திரும்புதல், பேச்சுவார்த்தை என்பதெல்லாம், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், கட்சி அரசியல் நடத்தாது, மனிதநேயத்தோடு அரசுடன் இப்பிரச்சினையில் ஒன்றுபட்டு அழுத்தம் கொடுப்போம் என்று நிற்க முனையாமல், கட்டிய வீட்டுக்குக் குறை கூறுவதுபோல அறிக்கை விடுவதால் என்ன உருப்படியான பலன் ஏற்படும் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.

தமிழர்கள் வழமைபோல் இதிலும் – தீயை அயணைக்க வேண்டிய நேரத்தில், அதில் பெட்ரோலை ஊற்றுவதுபோல் நடந்துகொள்ளலாமா?

இங்கே சிறு பிசிறுகூட இல்லாமல் ஒன்றுபட்ட ஐக்கியக் குரல் கிளம்பினால், அடுத்த நிமிடமே மத்திய அரசு, சிங்கள ராஜபக்சேவுக்கு ஆணையிடாது இருக்குமா?

மனச்சாட்சியோடு எண்ணுங்கள்; நடந்துவரும் நல்லவைகளைப் பாராட்டாவிட்டாலும், குறுக்குச்சால் ஓட்டாமலாவது இருக்கக் கூடாதா?

இன்னமும் சிங்கள அதிபராகவே தன்னைக் காட்டிக்கொள்ளும் ராஜபக்சே ஒரு பேட்டியில், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்தால்தான் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று கூறியிருப்பது தான் இந்த ஆண்டின் தலைசிறந்த (ஜோக்) நகைச்சுவையாகும்!

போர் என்று கூற மாட்டாராம்! இராணுவ நடவடிக்கையாம் அது! அது மற்றொரு வேடிக்கை!

போர் நடைபெறுவதே சிங்கள  அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தான் என்பது உலகறிந்த உண்மை!

அந்நிலையில், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுச் சரண் அடைந்தால், அப்புறம் இவர் போர் நிறுத்தம் செய்வாராம்! என்னே வினோதமான அர்த்தமற்ற பேச்சு! அப்புறம் அங்கே ஏது போர் – அல்லது இராணுவ நடவடிக்கை?

அதிபர் இராஜபக்சேக்களுக்குத் தெரியும்படிதானே வான்படை, கடற்படை, தரைப்படை என்ற முப்படைகளையும் கொண்டு கொழும்பிலே வந்து தாக்கிவிட்டு, வெற்றிகரமாக தம் பகுதிக்கு விடுதலைப் புலிகள் திரும்பும் அளவுக்கு வலிமை பெற்று போர் புரியும் நிலையில், எத்தனை காலத்திற்கு இதோ, அதோ ஒழித்து விட்டோம், நெருங்கி விட்டோம் என்ற புரூடாக்கள் பயன்படும்?

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலங்கைப் பிரச்சினைபற்றிப் பேசிய அமெரிக்கத் தூதுவர், யதார்த்தமான ஒரு உண்மையைக் கூறி பதிவு செய்தாரே!

விடுதலைப் புலிகளுக்குள்ள வசதி – உறுதி இவைகளைப் பார்க்கையில் அவர்களைத் தோற்கடிப்பது ஒழிப்பது இயலாத காரியம் என்றாரே!

எனவே, இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலாக, அரசியல் தீர்வு காண இலங்கை அரசு முன்வர வேண்டும் என்று அவர் கூறியதை உணர்ந்து வற்புறுத்த நமது மத்திய அரசு முன்வருவது ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை, மனித உரிமைக் கண்ணோட்டத்தில் அவசரம், அவசியம் ஆகும்!

இப்போது முன்னுரிமை எல்லாம் அரசியல் தீர்வு காண வற்புறுத்தும் இந்திய அரசு – அந்த அரசியல் தீர்வுக்கு எது உரிய சுமூகச் சூழல்? அதை எப்படி ஏற்படுத்துவது? என்பதை விளக்கிட முன்வருதல் அவசியமாகும்!

1987 இல் போடப்பட்ட ராஜீவ் – ஜெயவர்த்தனே உடன்பாட்டையும், ராஜபக்சே அரசு கடைப்பிடிக்காமல், வடகிழக்கு மாகாணத்தைப் பிரித்தது முதல், பல சரத்துகளை காலில் போட்டு மிதித்து விட்டதே! கூட்டாட்சித் தத்துவத்தைக் கூடப் பேசுவதில்லையே! மத்திய அரசு யோசிக்கட்டும்.

ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம்!

தமிழக முதல்வரின் நடவடிக்கைகளை விமர்சிப்பதை நிறுத்தி, ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க முன்வர காலதாமதம் வேண்டாம்! என்று வீரமணி தெரிவித்துள்ளார்.