புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கலைஞரிடம் முறையீடு!

Krishnaswamy

சென்னை: உசிலம்பட்டி அருகே தனது கார் மீது நடந்த தாக்குதல் குறித்தும், அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் பலியானது குறித்தும் இன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

உசிலம்பட்டி அருகே உத்தபுரத்தில் தீண்டாமை சுவர் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந் நிலையில், அங்கு சென்ற புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் கார் ஏழுமலை என்ற இடத்தில் தாக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந் நிலையில் இடகோட்டைப்பட்டி என்ற இடத்தில் நேற்று வன்முறையில் ஈடுபட்ட கும்பலைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுரேஷ் என்பவர் உயிரிழந்தார்.

இந் நிலையில் முதல்வரை சந்தித்தார் கிருஷ்ணசாமி, 30 நிமிடங்கள் நடந்த இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

நடந்த சம்பவம் குறித்து முதல்வரிடம் விளக்கினேன். துப்பாக்கி சூட்டில் இறந்த வாலிபர் குடும்பத்துக்கு அரசு ரூ.2 லட்சம் உதவித் தொகை வழங்கியுள்ளது. இதை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

பலியான வாலிபர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குமாறும் கோரினேன். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அமர்வு நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் எனவும் முதல்வரிடம் கேட்டிருக்கிறேன்.

எனது கார் மீது நடந்த தாக்குதலை கண்டித்து போராட்டம் நடத்திய புதிய தமிழகம் தொண்டர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை வாபஸ் பெற வேண்டும், கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும், என்றும் முதல்வரிடம் கூறினேன்.

இறந்த வாலிபரின் இறுதிச் சடங்கில் நான் கலந்து கொள்வேன் என்றார்.

துப்பாக்கி சூடு-பலி: விசாரணைக்கு உத்தரவு:

முன்னதாக துப்பாக்கிச் சூட்டில் பலியான வாலிபரின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நஷ்டஈடு வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். மேலும் இது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர்/ உட்கோட்ட நீதிபதி அளவில் நீதி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

ஏழுமலையில் தொடரும் பதற்றம்:

இதற்கிடையே உத்தப்புரம், எழுமலை, அணைக்கரைப்பட்டி, சீலநாயக்கன்பட்டி போன்ற கிராமங்களுக்கு 3வது நாளாக இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இப் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

எழுமலை, இடகோட்டைப்பட்டி கிராமத்தில் மதுரை மாவட்ட எஸ்பி மனோகர் தலைமையில் போலீசார் வீடு, வீடாக சோதனை நடத்தி 20 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து இந்த கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.

இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தமிழக கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன் நிருபர்களிடம் பேசுகையில், கலவரத்தில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்தப் பகுதியில் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழர்களுக்கு 80,000 உணவு-துணி பாக்கெட்டுகள்

thatsTamil Bookmarks
புதன்கிழமை, நவம்பர் 5, 2008
Rice

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் வழங்கியுள்ள ரூ. 6 கோடி மதிப்பிலான வேட்டி, சேலை உள்ளிட்ட துணிகளும், தமிழக உணவுத்துறை ஒதுக்கியுள்ள அரிசி, பருப்புகள் ஆகியவையும் இரவு பகலாக பேக் செய்யப்பட்டு வருகின்றன.

80,000 பேருக்கு வழங்கும் வகையில் அவை பேக் செய்யப்பட்டு வருகின்றன.

இலங்கை தமிழர்களுக்கு 800 டன் உணவு பொருட்கள் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி இலங்கை தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து நிவாரண நிதியாக ரூ. 7 கோடியும் துணிமணிகள், அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்களும் குவிந்துள்ளன.

அரசுத் துறையான கோ-ஆப்டெக்ஸ் மூலம் சுமார் ரூ. 6 கோடி மதிப்பிலான துணிகள் இலங்கை தமிழர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள கோ-ஆப் டெக்ஸ் சங்கங்களில் இருந்து துணிகள் சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப் டெக்ஸ் திடலுக்கு கொண்டு வரப்படுகின்றன.

1 வேட்டி, 1 சேலை, 1 லுங்கி,1 நைட்டி, 2 துண்டுகள், 2 போர்வைகள் கொண்ட 80,000 பேக்குகளை கட்டப்பட்டு வருகின்றன.

இந்த பார்சல் செய்யும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது. இந்த பணியில் 500 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு பேக்கிலும் ‘இலங்கை தமிழர்களுக்கு இந்திய-தமிழக மக்களிடம் இருந்து’ என்ற வாசகம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.

அதே போல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக 80,000 சிறு மூட்டைகளில் அரிசி, பருப்புகள் பேக் செய்யப்பட்டு வருகின்றன.

15 கிலோ அரிசி 2 கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சர்க்கரை, டீ தூள் பாக்கெட்2, குளிக்கும் சோப்பு, சலவை சோப்பு, பேஸ்ட் ஆகியவை கொண்ட 80,000 மூட்டைகள் பார்சல் செய்யும் பணியும் சென்னையில் நடந்து வருகிறது.

விருகம்பாக்கம், நந்தனம், திருவான்மியூர் ஆகிய சிவில் சப்ளை நிறுவன குடவுன்களில் இந்த பணி நடக்கிறது.

இந்த நிவாரண பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.