சந்தர்ப்பவாத கம்யூனிஸ்டுகளுக்கா உங்கள் ஓட்டு ?

கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கு காங்கிரஸ் எதிரி. ? நேற்றுவரை மத்தியில் காங்கிரசுடன் கூட்டு…! இன்று காங்கிரசுக்கு எதிரி.

மதவாதத்தை எதிர்ப்போம். பிஜேபியை ஆட்சிக்கு வர விட மாட்டோம் என்ற முழக்கம். பிஜேபி ஆளும் மாநிலங்களில் கூட கொண்டு வரத் தயங்கிய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்த அதிமுகவுடன் தமிழகத்தில் கூட்டு…..!

தொழிலாளர் வர்க்கத்திற்காக அனுதினமும் பாடு படுவோம் என்று சொல்லும் கம்யூனிஸ்டுகள் கொஞ்சம் பக்கங்களை பின்னோக்கி புரட்டிப் பார்க்கட்டுமே.

ஒரே கையெழுத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது யார் ?

லாபம் இல்லை , அதனால் போனஸ் இல்லை என்று போக்குவரத்து ஊழியர்களை அலைக்கழித்தது யார் ?

இதே அதிமுக தானே ?

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் கம்யூனிஸ்டுகளே , சேது சமுத்திரத் திட்டம் தேவை என்று அனுதினமும் நீங்கள் குரல் கொடுக்கவில்லையா ?  காங்கிரசு அரசு அதைத் தாமதப்படுத்துகிறது என்று குறை சொல்லவில்லையா ?

இதே அதிமுக இன்று என்ன சொல்கிறது. ?

சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவோம் என்று சொல்கிறது…..அதைப் பற்றீ எதுவுமே பேசாமல் இருப்பது சந்தர்ப்பவாதம் அன்றி வேறென்ன. ?

அடுத்தது ஈழம் …..

மதிப்பிற்குரிய தா.பாண்டியன் அவர்களே , வரதராசன் அவர்களே…….

நீங்கள் ஈழத் தமிழர்களின் நன்மை கருதியா அதிமுகவுடன் கூட்டுப் போட்டீர்கள்? நீங்கள் அதிமுகவுடன் கூட்டணி சேரும் போது அதிமுகவின் நிலை என்ன ?

இலங்கையில் ஒற்றையாட்சி முறை. விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள். தமிழ்ச்செல்வனுக்கு எழுதிய இரங்கல் கடிதம் கூட இறையாண்மைக்கு எதிரானது. பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும், போர் நடக்கும் போது சில தமிழர்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ராஜபக்சேவே சொல்லத்தயங்கியவற்றை எல்லாம் வெளிப்படையாகப் பேசியவர் தானே புரட்சித் தலைவி அவர்கள்?

இன்று அவர் ஈழத்துக்கு குரல் கொடுப்பது நாடகமில்லையென்றும் , கருணாநிதிதான் நாடகம் நடத்துகிறார் என்றும் சொல்வது என்ன நியாயம் ?

சரி , மூன்றாவது அணியில் இந்திய அளவில் பெரிய கட்சி மார்க்சிஸ்டு.

நாளை ஒருவேளை மூன்றாவது அணி ஆட்சியமைக்குமானால் , மார்க்சிஸ்டு அதற்கு தலைமையேற்குமானால் மார்க்சிஸ்டுகளின் ஈழ நிலை என்ன ?

ஒற்றையாட்சிக்குட்பட்ட இலங்கை. தனி ஈழம் கோருவது தவறு ….அதுதானே மார்க்சிஸ்டுகளின் நிலை….? இதுதானே இ.கம்யூவின் நிலையும் கூட ? இன்றும் கூட கம்யூனிஸ்டுகள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளவில்லையே ? ஆட்சிக்கு வந்தால் மட்டும் எப்படி திடீரென்று தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளப்போகிறார்கள் ?. இவர்கள் அனைவரும் இணைந்த கூட்டரசு எப்படி இலங்கைப் பிரச்சினையில் ஒத்த கருத்தைக் கொண்டு வந்து தமிழீழம் அமைக்கப் போகிறார்கள் ?

தேர்தல் வரை எதையேனும் மக்களை ஏமாற்றுவதற்குத் தானே நீங்கள் ஈழத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள்?? இதுதானே சந்தர்ப்பவாதம் ? இத்தகைய சந்தர்ப்பவாதக் கூட்டணிக்கா உங்கள் ஓட்டு ?

அது ஒருபுறமிருக்க , சீனாவின் சொல்படியே எப்போதும் நடக்கும் இந்த கம்யூனிஸ்டுகள் சீனாவின் முழு ஆதரவுடன் நடக்கும் இந்தப் போரையா இராணுவத்தை அனுப்பி நிறுத்தப் போகிறார்கள் ? இன்றுவரை மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கூற்றை அங்கீகரித்துப் பேசியிருக்கிறார்களா இவர்கள் ?

ஈழத்திற்கான ஆதரவு சத்தியமாக அவசரத் தேவைதான். ஆனால் , அவசரகதியில் ஓட்டுக்களைப் பெறுவதற்காகவே எழுப்பும் கோஷங்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். அதன் பலனை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அனுபவிக்கப் போகிறவர்கள் நம்மை விட ஈழத்தமிழர்கள்தான்.
தமிழ் மக்களே………………………….சிந்தியுங்கள்.